பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஆழ் மனத்தில் ஓர் உண்மை புலப்படுகிறது. தம் குறை காரணமாக அனுபவம் கைவிட்டுப்போக, அனுபவத்தைத் தந்தவனை ஏசுவதற்கு என்ன காரணம்? காரணம் ஒன்றும் இல்லை. எனவே, ஏசியது தவறு என்று உணர்கிறார். அப்பிழையைச் செய்ததற்கு மன்னிப்புக் கோரும் வகையில்,


ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய்

என்று பாடுகிறார். (வேசறுதல் = கழிவிரக்கம்)

இப்பாடலின் முதலடி 'ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து வேசறுவேன்’ என்று நிற்கின்றது. கொண்டுசுட்டிப் பொருள் செய்தால், யான் உன்னை ஏசினும், ஏத்தினும் என் பிழைக்கு இரங்கி வேசறுவேன் என்று நிற்கும். ஏசினும், ஏத்தினும் என்பவை முற்றிலும் முரண்பட்ட சொற்களாகும். ஏத்துதல் என்பது ஒருவருடைய பண்புகளை உயர்த்திச் சொல்லி, அதன் பயனாாக அவர் உயர்ந்து நிற்கின்றார் என்ற பொருளைத் தரும். இதன் எதிராக, ஏசுதல் என்பது அவரிடம் இல்லாத, அல்லது உள்ள குறைகளைப் பெரிதுபடுத்திக் கூறி, அவற்றால் அவர் தாழ்ந்து நிற்கின்றார் என்று பழிப்பதாகும். முற்றிலும் மாறுபட்ட அந்த இரண்டு சொற்களையும் ஒன்றாக அடுக்கி, 'உம்'மையும் கொடுத்துப் பாடுகிறார் அடிகளார்.

ஒரு வேளை ஏசிவிட்டால் பின்னர் அதனை நினைந்து, தாம் செய்தது பிழை என்று உணர்ந்து கழிவிரக்கம் கொள்வது நியாயமே ஆகும். ஆனால், ஏத்திப் புகழ்ந்த பிறகு என் பிழைக்கே வேசறுவேன்’ என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? இதனைப் பாடியவர் இறையருளில் தோய்ந்த தலையாய கவிஞர் ஆவார். எனவே, அவரது ஒவ்வொரு சொல்லையும் சிந்தித்துப்