பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கூடப் பிழை உள்ளது என்பதை உணர்ந்த அந்தப் பக்தன், ‘ஐய! நின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையின் நின்னடி உள்ளி வந்தனன், நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய்’ (திருமுருகாற்றுப்படை: 78-79) என்று கூறிவிட்டு, வாயை மூடிக்கொண்டான். புகழ்தலில்கூடப் பிழை உண்டு என்று உணர்ந்தவன் வாயை மூடிக் கொண்டவுடன் முருகப்பெருமான் வெளிப்பட்டு 'அஞ்சல் ஒம்புமதி! அறிவல் நின் வரவு!’ (திருமுருகாற்றுப்படை:291) எனக் கூறிகான் என்ற முறையில் திருமுருகாற்றுப்படை ஒரு புதிய கருத்தைப் பேசுகிறது.

திருமுருகாற்றுப்படையிலும் முருகனைப் புகழ்ந்து பாடியவன் முதலில் தன்னை மறக்கவே இல்லை. தன்னை மறவாமல் ‘நான்’ என்ற எண்ணத்துடன் எத்தனை புகழ்ந்தாலும் முருகன் அங்கே தோன்றவில்லை. அதனைப் பிழையெனக் கண்ட பக்தன் 'நான்’ என்பதை மறந்து தன் வாயை மூடியவுடன் முருகன் வெளிப்பட்டான். இந்த அடிப்படையில் அடிகளாரின் 'யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே இரங்கி' என்ற அடிக்குப் பொருள் கொள்ளலும் ஒருவகையாகும்.

இனி, மூன்றாவது வகையாகப் பொருள் கொள்வதும் ஒன்று. முக்குண வசப்பட்ட ஒருவரைமட்டும்தான் ஏத்தவோ இகழவோ முடியும். குணங்குறி கடந்தவனாகிய பரம்பொருளை ஏத்தினாலும் இகழ்ந்தாலும் அப்பொருள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. அப்பொருளின் இயல்பை அறியாது ஏத்தவோ இகழவோ செய்தால், அது செய்தவர்களைப் பாதிக்குமே தவிர அப்பொருளைப் பாதிக்காது. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவர்கள் ஏத்தல், இழித்தல் என்ற இரண்டிலும் பொருளில்லை என்பதை உணர்ந்து, வாய் முடி மெளனியாக இருந்துவிடுகின்றனர். ஏத்துபவரின் உள்ளக்கிடக்கை மட்டமானதாகவும் இருக்கக்கூடும்; இகழ்பவரின்