பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


உவமிக்கப்பட முடியாதபடி தன்னேர் இல்லாமல் விளங்குகின்றன. அப்படியிருப்பினும் அதன் இயல்பை வேறுவழியாகக் கூறமுடியாது ஆதலின் ஒண் மலர் என்ற உவமையைப் பெய்கின்றார்.

‘நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை' என்றதால் பல்வேறு பண்புடைய நாய்களின் குலத்தில் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு நாயைத் தமக்கு உவமையாக்கிக் கூறுகிறார் அடிகளார். தம்மை நாய் என்று கூறிய பிறகுதான் ஒண்மலர்த் தாள் தந்து என்ற உவமையின் சிறப்பை அறிய முடிகிறது. எவ்வளவு சிறப்புடைய மலராயினும் நாய் அதன் அருமைப்பாட்டை அறிய முடியாதன்றோ!

அந்த முறையில் அந்தத் தாள் உயர்ந்ததுதான். என்றாலும் என்ன? நாய்போன்றவராகிய தாம் அந்த ஒளி பொருந்திய மலரை அறிந்து அனுபவிக்கும் ஆற்றல் பெறவில்லை என்ற குறிப்புப் பொருளும் இவ்விரு அடிகளிலும் புதைந்துள்ளது.

பொதுவாக நாய்களுக்குச் சில இயல்புகள் உண்டு. ஒரு முறை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டால் மறுமுறை பிறர் உதவியின்றி அந்த இடத்தைத் தேடிச் சென்று அடையும் இயல்புடையது நாய். ஒரு முறை உணவிட்டு, அதன் பசியைப் போக்கிவிட்டால் எத்தனை காலமாயினும் அவர்கள் மாட்டு நன்றி பாராட்டும் இயல்பும் உடையது நாய்.

‘நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை' என்று அடிகளார் கூறியதில் நாய்க்குலத்திற்கு உரிய இவ்விரு இயல்புகளும் தம்பால் இல்லை என்று நொந்து கொள்கிறார்.

நன்னெறி காட்டினான். அவன். அவ்வழிச் செல்ல வில்லை என்பதால் நாயின் முதல் இயல்பு தம்பால்