பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



இதன் எதிராக, அறிதல் என்பது மூளையின் செயலாகும். அந்தத் தொழில் தொடங்கும்போதே 'நான்’ முன்னர் நிற்கும். நான் ஆராய்கிறேன், நான் அறிய முற்படுகிறேன் என்று பேசும்பொழுது, அறிதல் ஆகிய செயல் 'நானு’ள் அடங்கியிருக்கும் அறிவின் செயலாகும். இந்த ஆராய்ச்சியில் எத்தனை தூரம் சென்றாலும், எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் ‘நான்' இருந்து கொண்டேயிருக்கும். எனவே, உணர்தல்போல் அல்லாமல் அறிதல் முற்றிலும் மாறுபட்ட செயலாகும்.

உணர்வில் 'நான்' அமிழ்ந்துவிடுகிறது; அறிதலில் ‘நான்' தலைதூக்கி நிற்கின்றது. பெண், ஆண், அலி என்று ஒருவரைப் பிரித்துக் காணுதல் அறிவின் செயலாகும். அறிவிற்கு அப்பாற்பட்டவனாகிய இறைவனை, வடிவு கடந்தவனாகிய இறைவனைப் பெண், ஆண், அலியென்று வடிவிற்கு உரிய அடையாளங்களோடு அறிய முற்படுவது பொருந்தாது. இதனைக் கூறவந்த அடிகளார் 'பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை' என்று கூறுகின்றார்.

நிர்க்குண, நிராமய, நிராலயம் ஆனது அப்பொருள் என்றால், அதனை அடைய முயல்வதோ, அதற்குரிய வழிகளை மேற்கொள்வதோ பயனற்ற காரியம் என்ற எண்ணம் தோன்றிவிடுமன்றே? அதனைப் போக்குவதற்கு அடுத்த அடியிலேயே 'இவ்வளவு பெரிய பொருளாக இருப்பினும் இறைவன் தொண்டர்களுக்கு உள்ளவாறு காட்சி தருவான்’ என்ற அமைதிகிட்டுமாறு ‘தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்’ என்று கூறினார். உண்டு ஒர் ஒண்பொருள் என்று உணர்பவர் கட்குக்கூடப் பெண், ஆண், அலியென்று பிரித்துக் காண முடியாத நிலையில் காட்சி, கருத்து அளவைகட்கு அப்பாற்பட்டு நிற்கும் பொருள் இப்போது அடிகளார் தம் எதிரே தோன்றிற்று என்று கூறுகிறார். 'தோன்றினாய்’ என்று முன்னிலை ஒருமை வாய்பாட்டாற் கூறியமையின்