பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 முன்னரே, நீ என்னை ஆண்டுகொண்டமையின் என்னுடைய நன்மை-தீமைகள், சுகதுக்கங்கள், வளர்ச்சி. வளர்ச்சியின்மை ஆகிய அனைத்தும் உன்னைப் பொறுத்தவையாகும். ஆண்டுகொண்டபோதே என் குறையை நீ அறிந்திருக்க வேண்டும். இதில் நான் செய்யத்தக்கது ஒன்றுமில்லை. என்னிடம் உள்ளது என் மனம் ஒன்றுதான். உன் திருவடியை அன்றி அந்த மனம் வேறெங்காவது அலைந்திருக்குமானால் அந்தக் குற்றம் என்னையே சேரும். நல்ல வேளையாக அந்த மனம் வேறெங்கும் செல்லவில்லை. (நான் மற்றுப் பற்றிலேன் கண்டாய் என்ற தொடர் மேலே கூறிய கருத்தை விளக்குகின்றது) 'நீ என்னை ஆண்டாய்; அதன் பிறகு என் மனத்தில் வேறு பற்றுக்கள் இல்லை. இந்த நிலையில், அருளவேண்டியது உன்னுடைய கடமை. நீ அருளவில்லை என்ற குறையை எடுத்துச் சொல்லி அமைதி தேடுவதற்கு உன்னையன்றி வேறு யாருமில்லை”என்கிறார். - இந்த அரிய கருத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு இராமன்பற்றி வழங்கும் ஒரு செவிவழிக்கதை பெரிதும் உதவுகின்றது. வில்லைத் தரையில் ஊன்றிக்கொண்டு கடலை நோக்கிக்கொண்டிருந்த இராமன் தன் காலடியில் ஒரு தவளையின் பரிதாபமான குரலைக் கேட்டான். "தவளையே! வில் பட்ட உடனேயே நீ ஏன் கத்தவில்லை” என்று வினவினான். அப்பொழுது தவளை கூறிய விடை இதுவாகும். "ஐயனே! இந்தப் பரந்த உலகிடை யார் எனக்குத் தீங்கிழைத்தாலும் ஒ இராமா இந்தக் கொடுமையைப் பார்’ என்று கதறுவேன். உடனடியாக உன் அருள் கிடைக்கும். ஆனால், இப்பொழுது இந்தப் பெருந்துன்பத்தைச் செய்தவன் நீ, அப்படியிருக்க நான் யாரிடம் சென்று முறையிட முடியும்?' என்ற கேட்டதாம். இந்த அற்புதமான கருத்தைத்தான் அடிகளார் ஆண்ட நீ