பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. கண்ட பத்து நிருத்த தரிசனம்) இப்பதிகத்தின் பெயர் கண்ட பத்து என்று கொடுக்கப்பட்டதின் காரணம் ஒவ்வொரு பாடலும் கண்டேனே என்று முடிவதலாகும். அணிகொள் தில்லை கண்டேனே, குலாவுதில்லை கண்டேனே, விளங்குதில்லை கண்டேனே, தொழுதேத்தும் தில்லை கண்டேனே என்றெல்லாம் வருவதால் தில்லையில் தில்லைக் கூத்தன் தரிசனத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த மனநிலையில் பாடப்பெற்றவை இவை என்று கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. நிருத்த தரிசனம் என்ற உள்தலைப்பு பொருத்தமானதே என்று கூறலாம். 475. இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய் அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனைச் சிந்தை தனைத் தெளிவித்துச் சிவம் ஆக்கி எனை ஆண்ட அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே - . - 1 மனித உடம்பெடுத்தவர்கள் அனைவரும் ஐந்து இந்திரியங்களின் ஆளுகைக்கு உட்பட்டவர்களே ஆவர். ஒரு சிலர் இந்தப் பொது இயல்பிலிருந்து நீங்கி, இந்திரியங்களில் மயங்காமல் மேலே செல்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இவர்கள் புறநடையே தவிரச் சராசரி மனிதர்கள் அல்லர்.