பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. குழைத்த பத்து (ஆத்தும நிவேதனம்) குழைத்த பத்து என்று இப்பதிகத்திற்குத் தலைப்புத் தரப்பெற்றுள்ளது. இறைவன் திருவுள்ளத்தைக் குழைத்த, பத்துப் பாடல்கள் என்று ஒரு சாரார் பொருள் கூறியுள்ளனர். அந்தாதித் தொடையில் குழைத்த என்று தொடங்கிக் குழைத்து என்று முடிவதால் குழைத்த பத்து என்று ஒரு சாரார் பெயர் கூறியுள்ளனர். இவை இரண்டுமே பொருந்துமாறில்லை. திருவாசகம் முழுவதுமே இறைவன் கருணையை வியந்து பாடுவதுடன், அக் கருணை, தம் குற்றங்களைப் போக்கி ஆட்கொள்ள வேண்டும் என்ற பொதுவான கருத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். அப்படியிருக்க, இந்தப் பதிகம்மட்டும் இறைவன் உள்ளத்தைக் குழைத்தது என்று கூறுவது பொருந்துமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. குணங்குறி கடந்து நிற்கும் அப்பொருள், கருணையே வடிவானது ஆதலின், தம்மாட்டு இரக்கங் கொள்ள வேண்டும், தம் குற்றங் குறைகளை மன்னித்து ஆட்கொள்ள வேண்டும் என்று அடிகளார் முறையிடுவதில் தவறில்லை. ‘இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்' (திருவாச. 384) என்று அடிகளாரே பாடியுள்ளாரே? அப்படியிருக்க, அந்த இறைவனுடைய உள்ளத்தை இவருடைய பாடல்களின் மூலம் குழைக்க விரும்பினார் என்று கூறுவதில் தவறென்ன என்ற வினா எழுமேயானால், ஒரு சிறிய பிரச்சினைக்கு அது இடம் தரும்.