பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மனம், மொழி, மெய் என்ற மூன்றையும் ஒரே விஷயத்தில் ஈடுபடுத்தி என்ன செய்யவேண்டும் என்பதை ஒரே பாடலில் குறித்துச்செல்வது நம்மைச் சுண்டி இழுப்பதாகும். கையால் தொழுது, உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு (425) என்பதில் மார்பும், கைகளும் அவன் திருவடியைத் தழுவவேண்டும் என்று கூறுவதால் மெய்க்கு உரிய பணியைக் கூறினாராயிற்று. ‘எம்பெருமான் பெருமான் என்று வாயால் அரற்றி’ என்பதில் வாய்க்குரிய பணியை வகுத்தாராயிற்று. 'அழல் சேர் மெழுகு ஒப்ப’ என்பதில் உருக வேண்டிய பணியை மனத்திற்குக் கூறினாராயிற்று. இந்த ஒரு பாடலில் பொதுவாக மனம், மொழி, மெய் என்ற மூன்றுக்கும் மூன்று பணிகள் தரப்பெற்றுள்ளன. ஆசைப் பத்தில் வரும் பத்துப் பாடல்களில் அப்பா காண ஆசைப்பட்டேன்’ (419) என்றும், முத்தா உந்தன் முகஒளி நோக்கி முறுவல் நகை காண அத்தா சால ஆசைப்பட்டேன்’ (423) என்றும், கடியார் சோதி கண்டு கொண்டு. உன் பழ அடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன் (425) என்றும் வரும் இந்த மூன்று இடங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். காண ஆசைப்பட்டேன் என்ற சொற்களைக் கண்டவுடன் நம்மையும் அறியாமல் பருவுடலிலுள்ள இந்த ஊனக் கண்களால் காண்பதையே அடிகளார் இங்குக் கூறியுள்ளார் என்று பொருள் செய்கிறோம். எந்த ஒரு தொடரையும் முன்னர்ப் பின்னருள்ள சொற்களோடும், தொடரோடும் வைத்துப் பொருள் காண வேண்டுமே தவிர, தனியே எடுத்துப் பொருள் கண்டால் சிக்கலை உண்டாக்கிவிடும். காண ஆசைப்பட்டேன்’ என்றவுடன், ஊனக்கண்ணால் என்ற பொருள் மனத் திடைத் தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு.