பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 நினைதல்; நைதல்; உருகுதல்; நெகுதல்; கண்கள் சோர்தல் வாழ்த்தி நின்று ஏத்தல், இங்குக் கூறியவை அனைத்தும் முறைப்படி நடைபெற்றால் திருமுண்டம் தீட்ட அஞ்ச வேண்டியதில்லை. அல்லாதவர் தீட்டினால் அது போலியாதலின், அவர்களைக் கண்டபொழுது அடிகளார் அஞ்சுகிறார். இந்த முறையில் சிந்தித்தால், 'அம்ம நாம் அஞ்சுமாறே என்று அடிகளார் கூறுவது திருநீறு அணியாத பிற சமயத்தாரை அன்று என்பது நன்கு விளங்கும். அன்பும் உருக்கமும் இல்லாத போலிகளைக் கண்டு இறைவன் நகை செய்கின்றான்! அடிகளார் அஞ்சுகின்றார். இந்த முறையில் பொருள் செய்துகொண்டால் அச்சப் பத்து என்று இருப்பதற்கு உரிய காரணத்தை ஒருவாறு அறிந்து கொள்பவர்கள் ஆவோம். 518ஆம் பாடலில் வரும் இனிது அருள் பருகமாட்டா அன்பிலாதவர் என்ற அமைப்புமுறை செய்யுள்நோக்கி முன் பின்னாக அமைக்கப்பெற்றுள்ளது. திருவருள் கிடைத்தும் அதனைப் பருகமுடியாதவர்களாக உலகிடை இன்றும் பலர் உள்ளனர். அதற்குரிய காரணத்தை அடிகளார் இதோ பேசுகிறார்: அன்புடையவர், அன்பிலாதவர் என்று வேறுபாடு பாராமல் ஆற்று வெள்ளம்போல் திருவருள் பெருகி ஓடுகின்றது. அதன் கரையிலிருந்தும் அத்திரு வருளைப் பருகமாட்டாதவர்களாகச் சிலர் இருக்கின்றனர் என்றால், அது ஏன்? தண்ணிர் பருகவேண்டும் என்ற தாகமும், பருகுவதற்குரிய வாய் முதலிய கருவிகளும் இருந்தாலொழியப் பருக முடியாது. அதேபோன்று அன்பு என்ற ஒன்று மனம், சித்தம் முதலிய கரணங்களில் நிறைந்திருந்தாலொழியத் திருவருளைப் பருக முடியாது. அன்பு இலாமையினால் திருவருளைப் பருக மாட்டாதவர்களாக இவர்கள் உள்ளனர் என்பதையே முன்பின்னாக மாற்றிச் சொல்லியுள்ளனர்.