பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 யிருக்குமே தவிர, அந்தக்காட்சி, கரும்பு தரு சுவையைத் தந்திராது. திருவடிக் காட்சி கரும்புதரு சுவையை நல்க வேண்டுமேயானால், அதனைக் காண்பான் தன் இயல்பான நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். உயர்த்தப்படுவது என்றால் என்ன? இந்தக் கண் எவ்வாறு தொழிற்படுகிறது: மனத்தின் வழிதானே கண் தொழிற்படுகிறது? கண் காணும் காட்சியில் மனம் ஒன்றா விட்டால் அக்காட்சியே நடைபெறாது. அப்படியே கண்டாலும் எவ்வித மாற்றத்தையும் அக்காட்சி அறிவிக்காது. கண் எப்பொழுதும் ஒரே நிலையில்தான் உள்ளது. மனத்தோடு ஒன்றிப் பார்க்கும்போது சில அற்புதங்கள் நிகழ்கின்றன. காதலியைப் பார்க்கும்போதும் பகைவனைப் பார்க்கும்போதும் நொதுமலரைப் பார்க்கும்போதும் காட்சி ஒன்றேதான். ஆனால் அதன் உடன் சேருகின்ற மனம் காதலியைக் காணும்போது இன்பத்தையும், பகைவனைக் காணும்போது வெறுப்பையும், நொதுமலரைப் பார்க்கும் போது எவ்வித உணர்ச்சியுமற்ற நிலையையும் பெறுகிறது. இதனை மாற்றிக் கூற வேண்டுமானால், மனத்தில் அன்பு நிறைந்துவிட்டால், பகைவன் பகைவனாகத் தெரிய மாட்டான். அதுபோலக் குருநாதரின் கழல் இணைகள் கரும்புதரு சுவையைக் காட்ட வேண்டுமானால் கண்ணுடன் தொழிற்படும் மனத்தைச் சரி செய்ய வேண்டும். இந்த மனத்தின் இயல்பான நிலை என்ன? இரும்பு போன்ற கடினத்தன்மை உடையதாய் மனம் இருக்கின்ற வரையில் கழல் இணைக் காட்சி எந்தச் சுவையையும் தராது. எனவே, குருநாதர் இந்த இரும்பு மனத்தைக் கொஞ்சம்கொஞ்சமாக இழுத்து அதனை உருகும் நிலைக்குக் கொண்டுவந்தார். அதன் பயனாக திருவடிக் காட்சி கரும்புச் சுவையைத் தந்தது.