பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருவாசகம் சில சிந்தனைகள்-5 மேலே கூறப்பெற்ற முறையில் தம்முடைய வாழ்க்கை வீணே பிறந்து வளர்ந்து மாளாமல் செய்தான் என்று கூறவந்த அடிகளார், மாளாமல் இருப்பதற்குரிய புதிய காரணம் ஒன்றையும் மிகச் சிறப்பாக எடுத்துப் பேசுகிறார். 'நான் அணுகும் குலாத் தில்லை’ என்ற தொடரிலுள்ள மூன்று சொற்களில், நான் என்ற சொல் முன்னருள்ள நம்பும் என் சிந்தை நணுகும் வண்ணம்' என்பதனோடு இணைந்து ஒரு புதிய பொருளைத் தருகின்றது. வேறொன்றும் கூறாமல் நான் என்ற சொல்லைத் தனியே பயன்படுத்தினாலும் இந்த நானோடு அந்தக்கரணங்கள் பொறி புலன்கள் முதலியவை சேர்ந்தே நிற்கும். அந்தக்கரணங்களில் ஒன்றாகிய சிந்தை அதனைப் பெற்றுள்ள மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அடங்காத ஒன்றாகும். ஐம்பொறிகளையும் மனத்தையும்கூட நீண்ட பயிற்சியின் மூலம் ஒருவன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இவற்றைக் கட்டுப்படுத்திவிட்ட ஒருவனுக்குக்கூட, பொறிகள், மனம் என்பவைபோல அவனுடைய சிந்தை கட்டுப்பாட்டிற்கு உட்படுவதில்லை. உணர்விற்கு உறைவிடமாகிய சிந்தை அறிவுவழிப்பட்ட முடிவுகளை ஏற்கும் என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக ஒருவர் இறந்துவிட்டார் என்றால், கேட்பவர் உணர்வில் அதிர்ச்சி உண்டாகி அது அவலமாகப் பரிணமிக்கிறது. பிறப்பதும் சாவதும் இயல்புதான், அதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை என்று அறிவு எவ்வளவு எடுத்துக் கூறினாலும் உணர்விற்கு உறைவிடமாகிய சிந்தையில் அவை சென்று தாக்குவதில்லை. எனவே, சித்தம் அல்லது சிந்தை தனித்து இயங்குவதைக் காணவேண்டும். உணர்வின் அடிப்படையில் ஏதோ ஒன்றைச் சிந்தை நம்பத் தொடங்கிவிட்டால் அதனைக் கழற்றுவது இயலாத ஒன்று, சிந்தை எளிதாக எதனையும் நம்பிவிடுவதில்லை; நம்பிவிட்டால் அதனை மாற்றுவது கடினம்.