பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 367 உயிருண்ணிப் பத்தில் செல்வம் முதலியவற்றை வேண்டேன்’ என்றும், திருப்புலம்பலில் 'உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்’ என்றும் கூறியவர் உயிருண்ணிப் பத்தில் திருப்பெருந்துறையில் உறைபவன் ஆகிய இறை தாள்களைப் பூண்டேன் என்று வலுவாகக் கூறியமையால் இதனை அடுத்துச் சென்னிப் பத்தை வைக்கின்றோம். தாள் பூண்டேன்’ என்று கூறினால், குருநாதர் திருவடிகளை எங்கே பூண்டார்? அவர் திருவடிகளைச் சில வினாடிகள் தம் தலையில்தானே ஏற்றுக்கொண்டிருந்தார்? அந்தத் திருவடி அடிகளார் தலைமீது அமர்ந்திருந்தது சில வினாடிகள்தான் என்றாலும், அது எப்போதும் தலைமேல் இருப்பதுபோன்ற ஒர் உணர்வை அடிகளாரிடம் உண்டாக்கிவிட்டது. ஒவ்வொரு வினாடியும் அத்திருவடிகள் தலைமேல் தங்கியிருந்ததை நினைத்துக்கொண்டே இருக்கின்றார். அப்பொழுது ஒரு புதிய பரவசம் அவர் உள்ளத்தில் தோன்றுகிறது. அதனையே என் சென்னிக்கண் திருவடி மன்னி மலருமே என்று ஒவ்வொரு பாடலிலும் பாடுகிறார். இத்தொடரில் உள்ள ஒரு நுணுக்கத்தையும் மனத்தில் கொள்ளுதல் நலம். மலரைத் தாங்கிய தாமரைத் தண்டு நல்ல வளப்பம் பொருந்திய சேற்றில் ஆழப்பதிந்திருந்தால்தான், மேலே உள்ள தாமரை மலர் நன்கு மலர்ந்து மணம் பரப்பும். மற்றொரு வகையாக இதனைக் கூறுமிடத்து மலர் நன்கு மலர்ந்திருக்கிறது என்றால், தண்டு பதிந்துள்ள சேற்றுப் பகுதி வளமானது என்பது பெறப்படும். அதேபோலச் சென்னிக்கண் திருவடியாகிய மலர் நிலைபெற்று மலர்ந்து உள்ளது என்றால், அதன் பொருள் என்ன? அந்தத் திருவடி தங்கியுள்ள இவரது தலை அத்திருவடிகள் மலர்வதற்குத் தக்க இடமாக அமைந்துள்ளது என்பதுதானே பொருள்? சென்னிக்கண் திருவடி மன்னி மலருமே என்று கூறியதால் தலையில் தங்கியபொழுது அத்திருவடி மலர்கின்றது