பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இந்நிகழ்ச்சி ஒரு சில விநாடிகளில் நடைபெற்றது என்பதை அறிவிக்கவே, 570ஆவது பாடலில் வேந்தனாய்’ என்று குறிப்பிட்ட அடிகளார். இங்குத் துணைவனாய்’ என்று குறிப்பிடுகிறார். வேந்தனாய் வெளிப்பட்ட குருநாதர், ஒரு சில விநாடிகளில் துணைவனாக மாறி அடிகளாரின் ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிகாட்டி அழைத்துச்செல்லும் துணையாக மாறிவிட்டார் என்பதை இவ்விரு பாடல்களிலும் தெரிவித்துவிட்டார். துணையாகச் செல்பவர்கள் இலக்கணம் இருவகைப்படும். ஒருவகைத் துணையாவது, செல்பவர் கூடவே இருந்து அவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாகும். மற்றொருவகைத் துணை தூரத்தே இருந்துகொண்டு நான் இங்கேதான் இருக்கிறேன், அஞ்சாமல் வா’ என்ற ஒலியின்மூலம் மனத்திட்பத்தை உண்டாக்கித் தனியே செல்பவர்க்கு உதவி புரிவதாகும். அடிகளாரைப் பொறுத்தவரையில் குருநாதர், மலர்க் கழல்களைக் காட்டியதன் மூலமும், வடிவுடன் அமர்ந்திருந்ததன் மூலமும் முதல்வகைத் துணையாகப் பொலிவு பெறுகிறார். அந்தக் காட்சியே திருவாதவூரரின் வாழ்க்கைப் போக்கை மாற்றுவதற்குப் பேருதவி புரிந்தது. அமைச்சர் பதவியிலிருந்து அப்பொழுதுதான் விடுபட்டாராகலின் அரச-அமைச்சர் தொடர்பு இன்னும் அவருடைய ஆழ்மனத்தில் ஒரளவு இருந்திருக்கும். எனவே, குருநாதர் தோற்றத்தை வேந்தன்' என்று வர்ணித்தார். இப்பொழுது நிலைமை மாறிவிடுகிறது. துணைவன், வெளிப்பட்டு நின்று அழைத்துச் செல்லவேண்டிய தேவையில்லை. அடிகளார் வளர்ச்சியடைந்துவிட்டார். அவருடைய யாத்திரையில் ஒரோவழி தளர்ச்சி ஏற்படும்போதெல்லாம் துணைவனுடைய குரலைக் கேட்கவேண்டும். இப்பொழுது அந்தக் குரல் செய்யும் பணியை அந்தக் குரலுக்குடையவனுடைய திருச்சிலம்பு