பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் * 30

அதன்படி பழிச்சு என்ற பகுதியும் நர் என்ற இடைச் சொல் பெறுகையில் பழிச்சுநர் என வருதலே பொருந்துவதாகும்.

பழிச்சுநர்ப் பரவல் இந்தப் பிள்ளைத் தமிழில் வந்துள்ள பாயிரப் பகுதி. இது பெரும்பாலான பிள்ளைத் தமிழ்களில் இல்லை. அழகர் பிள்ளைத் தமிழில் மட்டும் வந்துள்ளது. அதன் பின் இப் பிள்ளைத் தமிழில் வந்துள்ளது. அழகர் பிள்ளைத் தமிழ் சற்றொப்ப நூறு ஆண்டுக்குமுன் அச்சாகியுள்ளது. பழிச்சினர்ப்பரவல் அங்குப் பாயிரமாகவேயுள்ளது. பழிச்சினர்ப் பரவல் என்பது அங்கும் மரபுப்படி தவறுதான்். ஆதலால் இந் நூலில் பழிச்சுநர்ப் பரவல் என்றே தலைப்புத் தரப்பட்டுள்ளது.

பழிச்சினர் என்றால் முற்காலத்தில் இறந்த காலத்தில்) வழிபட்டவர்கள் என்ற பொருள்படும். வைணவ மரபில் ஆசாரியர், ஆழ்வார்களின் உள்ளுயிர் (ஆன்மா) இன்றும் நம்மோடு இருந்து நமக்கு வழிகாட்டிக் கொண்டுள்ளது என்பது வைணவர் கொள்கை. இறைவனுக்குத் தொடக்கமிருந்தால்தான்் அவர்களுக்கும் முடிவுண்டாகலாம்.

ஆதலால் ஆசாரியார் ஆழ்வார்களைக் குறிப்பிடும்போது, முக்காலத்தும் ஒத்தியல்பவராக வாழ்ந்திருப்பவராகக் கருதிச் செப்புதல் வேண்டும் என்பது வாய்மையின் வாய்மை. ஆதலால் அவர்களைப் பழிச்சிதர் என்று இறந்த காலத்தால் கூறுவது பெரும்பிழை. பழிச்சுநர் என்று முக்காலத்துக்கும் உரிய சொல்லால் கூறுவதே முறை.

இந் நூல் காப்பு, அவையடக்கம், பழிச்சுநர்ப் பரவல் முதலிய பாயிரத்திற்குப் பின்பு, காப்புப் பருவத்தில் தான்் தொடங்குகின்றது. வைணவ நூல் ஆகையால், வையம் காப்பவனையே (சகத்ரட்சகன்) காப்புக் கடவுளாக வாழ்த்துகின்றார் நூலாசிரியர். இது பாட்டியல் மரபுப்படி சரியாக அமைகின்றது.

குமரகுருபரசுவாமிகள் இரு பிள்ளைத் தமிழ் நூல்கள் செய்துள்ளார். இரண்டையும் திருமால் காப்புடனேயே தொடங்குகின்றார். காப்புப் பாடல் இரண்டும் பச்சைப் பசுங் கொண்டலே என்ற ஈற்றுடனேயே முடிவது அழகுக்கு அழகு சேர்க்கின்றது.

ஆனால் சிவஞான முனிவர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய சைவச் சான்றோர் பாடிய பிள்ளைத் தமிழ் நூல்களில், காப்புப் பருவத்தில் திருமாலைப் பாடாமல் மரபை மீறியுள்ளனர். அதற்குக் காரணம் அவர்களின் கரைகடந்தெழுந்த சைவப் பற்றே எனலாம்.