பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணப் படலம்

39

கை குவித்து வணங்கி "பொற்புமிகு பாவையை மணந்து பொதிகைத் தென்றல் வீசும் பாண்டிய நாட்டை இருந்து ஆள்க" என்று வேண்டினாள்.

தேவர்களும் திருமால் பிரமன் முதலிய தெய்வங்களும் சிவ கணங்களும் வேதம் பயில அந்தணர்களும் தவம் செய்யும் முனிவர்களும் பல தேசத்து மன்னர்களும் நாட்டு மாந்தரும் மகளிரும் குழுமி இருந்து இச் சிறப்பு விழாவில் பங்கு கொண்டனர்.

அந்நாட்டு மக்கள் மணமக்களைக் கண்டு வியந்து பாராட்டினர்.

கன்னிதன் அழகுக் கேற்ற அழகன் இக்காளை என்பார்; மன்னவன் இவனே அன்றி வேறு இல்லை மதுரைக்கு என்பார்.

கலைமகளும் திருமகளும் சுந்தரவல்லியாகிய தடாதகையை 'சோபனம்' என்று கூறி வாழ்த்தி அவள் கைகளைப் பற்றி எழுப்பினர்; மறைகள் ஆர்த்தன.

அறைந்தன தூரியம்; ஆர்த்தன சங்கம்;
நிறைந்தன வானவர் நீண்மலர் மாரி;
எறிந்தன சாமரை; ஏந்திழை யார்வாய்ச்
சிறந்தன மங்கல வாழ்த்து எழு செல்வம்"

காஞ்சனை வேண்டியவாறு வீட்டு மாப்பிள்ளையாக இருந்து நாட்டு ஆட்சியை ஏற்றுக் கொள்ள இறைவன் இசைந்தார். ஆட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்சிப்படுத்திக் காட்ட இதனை ஒரு நாடகமாக ஏற்றுக் கொண்டு நடித்துக் காட்டினார்.