பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரிமை பெறுகிறாள். சோமசுந்தரரை மணந்து ஆட்சி அவரிடம் தரப்படுகிறது. இறைவனே ஆட்சி செய்த பெருமையைப் பாண்டி நாடு பெறுகிறது. பெண்ணரசி ஆட்சி செய்யும் பெருமையையும் பெறுகிறது. எவ்வகையிலும் பெண் ஆணுக்கு இளைத்தவர் அல்ல என்பது உணர்த்தப்படுகிறது.

‘பழி அஞ்சின படலம்’ என்ற கதை அருமையான கதை. எப்பொழுதோ மரத்தில் தொத்திக் கொண்டிருந்த அம்பு தைத்துப் பார்ப்பினி ஒருத்தி இறந்து விடுகிறாள். அங்கு எதிர் பாராதபடி வந்த வேடுவன்தான் கொன்றுவிட்டான் என்று தண்டிக்க முற்படுகின்றனர். இறைவன் பாண்டியனையும் பார்ப்பனனையும் ஊரில் செட்டித் தெருவில் நடக்கும் மணக்காட்சியைப் பார்க்க அனுப்புகிறார். கட்டிவைத்த பசு கட்ட விழ்த்தக் கொண்டு மணமகனை முட்டி அவனைப் பிணமகன் ஆக்குகிறது. இதற்கு எல்லாம் காரணம் கூறமுடியாது. சாவு எப்படி வரும் என்று கூற முடியாது. அதற்கு யாரையும் பழி கூறக் கூடாது என்ற கருத்தினை அறிவிக்கிறது.

இதைப் போலக் கருத்துள்ள கதைகள் பல உள்ளன. தமிழ் இசையின் பெருமையைக்காட்டப் பாணபத்திரனுக்கு உதவி செய்ய விறகு ஆளாக இறைவன் வருவதும் ஏமநாதனை வெல்வதும் அருமையான நிகழ்ச்சிகளாகும்.

இறைவன் விறகு வெட்டியாகவும், வளையல் விற்பவனாகவும், மீன் பிடிப்பவனாகவும் பிறந்து அற்புதங்கள் செய்வது அருமையான நிகழ்ச்சிகளாகும்

நக்கீரருக்கும் சிவனுக்கும் நடக்கும் சொற்போர் நக்கீரனின் அஞ்சாமையைக் காட்டுகிறது. நெற்றிக்கண் திறந்து காட்டினாலும் குற்றம் குற்றமே என்று பேசிய புலவன் அவன் நக்கீரர் தமிழ்ப் புலவர்க்குப் பெருமை சேர்க்கிறார்.