பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


11. ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை
மாற்றியவ் வாற்றான் மறித்தாற் போல்-தோற்றிப்
புலன்களெனப் போதம் புறம்பொழியு நந்தம்
மலங்களற மாற்றுவிக்கு வந்து.

இது, சிவாநுபவ வுண்மைக்குத் தவமிக்கார் சான்றாதலை உவமை காட்டி விளக்குகின்றது.

(இ-ள்) ஆற்றின் வழியே சென்று அலைகடலிற் பாய்ந்த நல்ல நீர், தன் தன்மை கெட்டுக் கடல் நீருடனே ஒன்றாகி மீண்டும் அவ் வாற்றின் வழியே எதிர்த்துச் செல்லுங்கால், கடல்நீராய் உவர்த் தன்மை பெற்றுச் சென்றாற்போன்று, ஆன்மபோதங் கெடச் சிவபரம் பொருளோடு ஒன்றிய சிவயோகிகளது உணர்வு, உலகின் புறத்தே வெளிப்படும் நிலையில் கண்டார்க்குப் பொறிகளின் வழி படரும் புலனுணர்வு போலத் தோன்றிப் பசுகரணங்கூடாமல் சிவகரணமேயாகப் புறத்தே மிக்குச் செல்லும்; அவ்வுணர்வு அருளின் தன்மையதாய் நம்முடைய மும்மலப்பிணிப்பும் அறவே நீங்குமாறு நம்பால் வந்து நம்முடைய மாசகற்றி நம்மைக் காத்தருளும் எ-று.

“அலைகடற்கே பாய்ந்த ஆற்று நீர் அந்நீர்மை மாற்றி மறித்தாற் போல், (சிவயோகிகளது) போதம் (கண்டார்க்குப்) புலன்களெனத் தோற்றிப் புறம்பு ஒழியும்; நம்மலங்கள் அறவந்து மாற்றுவிக்கும்” என இருதொடராக இயைத்துப் பொருள் கொள்வார் தில்லைச் சிற்றம்பலவர். புலன்களெனத் தோற்றுதலாவது, காண்பார்க்குப் புலன்வழிச் செல்லும் அறிவுபோல் தோற்றுதல். என என்பது உவமஉருபின் பொருள்பட வந்தது. புறம்பொழிதலாவது புறத்தே மிக்குச்செல்லுதல்; சிவஞானத்திற்குப் புறம்பாகிய பசுகரணங் கூடாமல் சிவகரணமேயாய் விளங்குதல் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.

கடல் நீருடன் கலந்து அதன் உவர்த்தன்மையைப் பெற்ற ஆற்று நீர், மீண்டும் ஆற்றின் வழியே எதிர்த்து வந்தாலும் கடல்நீரேயாய் விளங்குதல் போன்று, சித்தத்தைச் சிவன்பாலே வைத்த மெய்த்தவச் செல்வர்களது உணர்வு, பசுபோதமாந் தன்மைகெட்டுச் சிவ போதமாகவே விளங்கி உலகமக்களின் மலப்பிணிப்பை நீக்கி உய்வித்தருளும் என்பதாம்.

இனி, ‘புறம்பொழியின்’ எனப்பாடங்கொண்டு, ‘திரையையுடைய சமுத்திரத்தினிடத்திலே ஆறென்கிற பூமிவழியாக வந்து பாய்ந்த இனிமைத் தன்மையுடைய நீரானது, அந்த இனிமைத் தன்மையை விட்டு உவர்த்தன்மை பெற்று ஆற்றின் வழியே மீண்டாற் போல