பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


“அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே
     அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து
குறியாதே குறித்து அந்தக் கரணங்களோடுங்
     கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில்”

(சித்தியார் சுபக். 282.)


என உடன்பாட்டு முகத்தால் அருணந்தி சிவனாரும் அறிவுறுத்தியுள்ளமை காணலாம். ஐயன் என்றது, குருவாய் எழுந்தருளிய இறைவனை. அப்பொருள் என்றது, சிவபரம்பொருளை. அப்பொருளாதலாவது, தற்செயல்கெட அதுவேயாக ஒன்றுதல். பையவிளைதலாவது, உலகவாதனை யாகிய ஆரவாரமின்றித் தூய ஆன்மாவின்கண் சிவன் செயல் அமைதியாக விளங்கித் தோன்றுதல். இவ்வுண்மையினை மாணவனாகிய நீ முற்குறித்த நாயன்மார்களாகிய திருவருட் சான்றோர்களது வாழ்க்கையிற் கண்டு தெளிவாயாக என்பார் ‘பார்’ என்று அறிவுறுத்தியருளினார்.


எ. உள்ள முருகி லுடனாவ ரல்லது
தெள்ள வரியரென் றுந்தீபற
சிற்பரச் செல்வரென் றுந்தீபற.

இஃது, உயிரினது தன்முனைப்பும் செயலும் கெட ஆன்மாவின்கண் இறைவன் தன் செயலும் தானுமேயாய் உடன் தோன்றுதற்குரிய உபாயம் உணர்த்துகின்றது.

(இ-ள்) மேலான ஞானப் பெருஞ்செல்வத்தை வரையாது வழங்குமியல்புடைய அருள் வள்ளலாகிய இறைவர், ஆன்மாக்களது உள்ளம் (தீயிற்பட்ட மெழுகுபோன்று) உருகிய பக்குவ நிலையினைப் பெற்றால் உயிரியல்பு மறைந்து செம்பொருட்டன்மையாகிய தம்மியல்பே உயிரின்கண் புலப்பட்டுத் தோன்ற ஆன்மாவே சிவம் என்னும்படி ஆன்மாவோடு ஒட்டி உடனாவர். இங்ஙனம் நெஞ்சம் நெக்குருகி நிற்பாரோடு உடனாவதல்லது ஏனையோர் தமது சுட்டறிவினால் தெளிய ஆராய்ந்தறிந்து கூடுதற்குரிய எளிமை நிலையினரல்லர் என்று உணர்வாயாக. எ-று.

அநாதியே தன்னைப்பற்றியுள்ள களிம்பு நீங்கக் குளிகையில் வைத்து உருக்கிய செம்பு பொன்னென்னும் பெயர் பெற்றாற்போல, அநாதியே ஆன்மாவைப் பற்றிய மலமாகிய மாசு நீங்க இறைவனது திருவருளாகிய தீயிற்பொருந்தித் தூய்மைபெற்று நெஞ்சம் நெக்குருகிய மெய்யடியார்களே ஆன்மவியல்பு மறைந்து சிவமாந் தன்மைப் பெருவாழ்வைப் பெற்ற செம்புலச் செல்வர் என்பார்,