பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

(செஞ்சியிலிருந்து) ஆண்டவன். பறங்கிப்பேட்டையிலிருந்த இவருடைய அதிகாரியாகிய கோபால தாதாஜி பண்டிதர் என்பவர் தில்லைத் திருப்பணியைக் கண்காணித்தவராவார். இவ்வாறு தில்லைக்கூத்தப்பெருமான் சிதம்பரத்தினின்றும் இடம்பெயர்ந்தமைக்கு பீஜப்பூர் சுல்தானின் படையெடுப்பே காரணமாதல் வேண்டும்.

கி.பி. 1686-க்குப்பின் தில்லை நடராசப் பெருமான் சிதம்பரத்தினின்றும் வெளியே புறப்பட்டு 1696-இல் மீண்டும் சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தார் என்ற செய்தி, ஆயிரக்கால் மண்டபக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்விடப் பெயர்ச்சிக்கு அக்காலத்தில் ஔரங்கசீப்பின் படையெடுப்பு தெற்கு நோக்கி வந்ததே காரணம் எனத் தெரிகின்றது. தென்னாட்டில் வந்த இம் முகலாயப் படைகள் செஞ்சியில் 7 ஆண்டுகள் தங்கியிருந்தன. இவர்களால் ஏற்படும் அபாயத்தை எண்ணியே தில்லைக் கூத்தப்பெருமானைத் திருவாரூர்க்கு எடுத்துச்சென்றிருத்தல் வேண்டும். தில்லை நடராசப்பெருமான் சில ஆண்டுகள் திருவாரூர்க்கோயிலில் தங்கியிருந்தமைக்குரிய அடையாளங்கள் அக்கோயிலில் உள்ளன என்பர். தஞ்சையிலிருந்து ஆண்ட மராட்டிய மன்னர் சகசி என்பவர் திருவாரூர்த்தலத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவராதலின் தில்லைநடராசப் பெருமான் திருவுருவத்தை அவ்வூர்த் திருக்கோயிலில் வைத்துப் பாதுகாத்து வத்தார் எனக் கருத இடமுண்டு. தில்லைக் கூத்தப் பெருமானுடன் எடுத்துச் செல்லப்பெற்ற தில்லைச் செப்பேடுகள் நான்கும் திருவாரூரிலேயே சேமிக்கப் பெற்றிருந்தமையால் அவை திருவாரூர்ச் செப்பேடுகள் எனக் குறிக்கப்பெறுவனவாயின. தில்லை நடராசப் பெருமானை யாரும் அறியாதபடி மூடி மறைத்துத் திருவாரூர்க்கு எடுத்துச் சென்ற மரப்பெட்டி தில்லைப்பேரம்பலத்தில் இன்னும் வைக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

3. சிவாலய தரிசன விதி

சிவபரம்பொருளை வழிபடுதற்குச் சிறந்த இடம் திருக்கோயிலாகும். திருக்கோயிலுக்கு நீராடி, தூய உடை உடுத்து திருநீறு அணிந்து செல்லுதல் வேண்டும்.