பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

பரவித் தில்லைப்பதியை யடைந்து கூத்தப்பெருமானை ஆர்வமுறக் கண்டு தொழுதார். 'நன்னெறியில் ஒழுகியவர்கள் வழுவி நரகினை யடைந்து துன்புறாதபடி தடுத்தாட் கொள்ள வல்ல இறைவனை நமக்கு உரிமையாகப் பெற்றோம்' எனத் தம் நெஞ்சத்திற்கு அறிவுறுத்தும் முறையில் "மடித்தாடும் அடிமைக்க ணன்றியே" என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். அப்பதிகத் திருக்கடைக் காப்பில் 'மீ கொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே' எனத் தில்லையம்பலவன் கொங்கு நாட்டுப் பேரூரில் தமக்கு ஆடற்கோலம் காட்டியருளிய திறத்தைக் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

பேரூர் இறைவன் தம்பொருட்டுத் தில்லைத்திருநடனத்தைக் காட்டியருளினமையால் அத்தலத்திறைவனைக் "குடகத் தி(ல்)லையம்பலவாணன்" (7-10-2) என நம்பியாரூரர் - குறித் துள்ளமையும் இங்கு நினைக்கத் தகுவதாகும். பேரூர் மேலைச் சிதம்பரம் எனவழங்குதற்கும் இந்நிகழ்ச்சியே காரணமாகும்.

'கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை' எனவும், செல்வர்வாழ்தில்லை, விழவாரணிதில்லை, சீலத்தார் தொழு தேத்து சிற்றம்பலம், தில்லைமாநகர்ச் சிற்றம்பலம், கற்றவர் தொழுதேத்து சிற்றம்பலம், தூய செம் பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம், தேரினார் மறுகில் திருவாரணிதில்லை' எனவும் புலியூர்ச் சிற்றம்பலம் எனவும் தேவாரத் திருமுறைகளில் இத்தலம் போற்றப் பெற்றுள்ளது.

மணிவாசகர்

திருவாதவூர்மகிழ் செழுமறை முனிவராகிய மனிவாசகப் பெருமான், திருப்பெருந்துறையிற் குருவாய் வந்தருளிய இறைவன் 'நலமலி தில்லையுட் கோலமார் தரு பொதுவினில் வருக' எனப் பணித்த வண்ணம் தில்லைப்பதியை யடைந்து, கூத்தப் பெருமானை அழகிய மணி வார்த்தைகளால் பாடிப்பரவி புத்தரை வாதில் வென்று தவச்சாலையில் தங்கியிருந்தார். அப்போது. இறைவனே மறை முனிவராகி வந்து திருவாசகம் முழுதையும் எழுதிக் கொண்டதுடன் தில்லைச் சிற்றம்பலவனைப்