பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தில்லையில் கூத்தப்பெருமானுக்குத் தான் நடத்தும் நாள் வழிபாட்டில் பெருமானது திருவடிச்சிலம்பொலி கேட்டு மகிழ்வதை நியதியாகக் கொண்ட சோழமன்னன், அன்றிரவு முழுதும் காத்திருந்தும் அவ்வொலியைக் கேட்கப் பெறாது வருந்தித் துயில்கொண்டான். நடராசப் பெருமான் மன்னனது கனவிலே தோன்றி, "வேந்தனே, கவலைப்படாதே இன்று நாம் சேந்தனளித்த களியமுதை உண்ணச் சென்றமையால், நீ நடத்தும் பூசைக்குவரத் தாழ்த்தோம்" என்று கூறி மறைந்தருளினார். விழிப்புற்று சோழ மன்னன் சேந்தனாரைக் காண விரும்பி விடியற்காலத்திலேயே தில்லைப்பெருமானை வணங்கச் சென்றான். பொன்னம்பலத்தில் களியமுது சிந்திக் கிடப்பதைக்கண்ட வேந்தன், தான் இரவிற் கண்ட கனவின் உண்மையைத், தில்லை வாழந்தணர் பலர்க்கும் தெரிவித்தான். அதனை யுணர்ந்த பலரும் சேந்தனாராகிய அவ்வடியவர்யார் என்பதனை அறிந்து கொள்ளப் பெரிதும் விரும்பினார்கள்.

மார்கழித்திருலாதிரைத் திருவிழா விழாவில், மழை பெய்தமையால் தில்லையில் திருத்தேர் சேற்றிலழுந்தி ஓடாது தடை பட்டு நின்றது. அப்பொழுது, "சேந்தனே, திருத்தேர் ஓடப் பல்லாண்டு பாடுக', என்றதொரு வானொலி யாவரும் கேட்கத் தோன்றியது. அங்கு, தேரிழுக்கும் அடியார் குழுவில் நின்ற சேந்தனார், “மன்னுகதில்லை வளர்கநம் பக்தர்கள்'எனத் தொடங்கும் திருப்பல்லாண்டுத் திருப்பதிகத்தைப் பாடினார். வடம் பிடிக்காமலே, தேர் திருவீதியில் ஓடி நிலைக்கு வந்து சேர்ந்தது. இவ் வற்புதத்தைக் கண்டார் அனைவரும் சேந்தனாரது பேரன்பின் திறத்தையும் அவர் பொருட்டுக் கூத்தப் பெருமான் நிகழ்த்திய அருட்செயலையும் எண்ணி யெண்ணி நெஞ்சம் நெக்குருகினர். பறையர் குலத்தவராகிய சேந்தனார்க்கு இறைவன் அருள் செய்த இந் நிகழ்ச்சியை,

"பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து
வேந்தன் றனக்கன்றி யாட்செய்வ தென்னே விரிதுணிமே
லாந்தண் பழைய அவிழையன் பாகிய பண்டைப் பறைச் -
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே"

என நம்பியாண்டார் நம்பிகளும்,