பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
77

கடவுளாகிய பிரமன் அந்தர்வேதியென்னும் இடத்தில் தான் செய்யும் வேள்விக்கு உடனிருந்து உதவி புரியும்படி வியாக்கிரபாதமுனிவர் இசைவு பெற்றுத் தில்லை மூவாயிரவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றான். வேள்வி முடிந்தவுடன் இவ்வந்தணர்களையழைத்து வரும்படி இரணியவர்மனிடம் வியாக்கிரபாதர் கூற அவனும் அங்கே சென்று தில்லை மூவாயிரவரையும் தேர்களில் ஏற்றிக்கொண்டு தில்லையை அடைந்தான். தில்லைக்கு வந்த பின் எண்ணிப் பார்த்து மூவாயிரவருள் ஒருவரைக்காணாது திகைத்தனன். அப்பொழுது தில்லையம்பலப் பெருமான் தேவர் முனிவர் முதலிய யாவரும் கேட்ப 'தில்லை மூவாயிரவருக்கு யாமும் ஒப்பாவோம்' என அருளிச் செய்தான் எனவும் அவ்வருள் மொழிகளைக்கேட்டு அங்குள்ளாரனைவரும் அளவிலா மகிழ்ச்சியுற்றனர் எனவும் கோயிற்புராணம் கூறும். தில்லையம்பலவாணராகிய இறைவனோடு ஒத்து ஒன்றி வாழும் சிவயோகநிலை கைவரப் பெற்றவர் தில்லைவாழந்தணர் என்பது மேற்குறித்த புராணச் செய்தியால் இனிது புலனாதல் காணலாம்.

"செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்க ளானார்
மும்மையாயிர வர்தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப்பெறும் பேறொன்றில்லார்
தம்மையே தமக்கொப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்
"

{பெரிய-தில்லைவாழ்-8)

எனச் சேக்கிழார் நாயனாரும்

"முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு
ஒத்தே வாழுந்தன்மையாளர் ஓதிய நான்மறையைத்
தெத்தேயென்று வண்டுபாடுந் தென் தில்லையம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ
"

{திருவிசைப்பா -23.3)

எனக் கண்டராதித்தரும் தில்லை மூவாயிரவராகிய இத்திருக் கூட்டத்தாரைப் பற்றிக் கூறிய வாய் மொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கனவாகும்.

திருநீலகண்டக் குயவனார்

தில்லையில் வேட்கோவர் குலத்திற் பிறந்த இவர், தில்லையம்பலவர் பால் அளவற்ற பேரன்புடையவர். பொய்கடிந்து