பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவாமீ! என்னுடைய அவஸ்தையைக் கண்டு நீர் இரங்காவிட்டாலும், ஒரு பாவத்தையும் அறியாத பகுத்தறிவற்ற என்னுடைய சிறு குழந்தைகள் படும்பாட்டைக் கண்டு கூடவா உமக்கு மனதிரங்கவில்லை. ஆ தெய்வமே! எங்கள் மேல் கருணா கடாக்ஷம் வையும் ஐயனே!” என்று கூறி நிரம்பவும் உருக்கமாகக் கடவுளை வேண்டி ஸ்தோத்திரம் செய்த பின் கோவிலை விட்டு வந்துகொண்டே இருந்தான். அதற்கு முன் அவனுடன் பழகிய மனிதர்கள் ஆங்காங்கு குறுக்கிட்டனர். ஆதலால், அவர்களைப் பார்க்கவும், அவர்களுடன் பேசவும் அவனுக்கு ஒருவித லஜ்ஜை தோன்றிப் போராடியது. ஆகையால் அவன் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடி நடந்து கொண்டே சென்றான். அவ்வாறு அவன் சென்றது எப்படி இருந்ததென்றால், உலகத்திலுள்ள சகலமான பொருள்களுக்கும் பூமிதேவியே உரிமை உடையவளன்றி, மனிதர்கள் வகித்துக்கொள்ளும் உரிமை பொய்யான உரிமையாதலால், தான் போலிச் சொந்தக்காரரின் தயவை நாடுவதைவிட உண்மைச் சொந்தக்காரரின் தயவை நாடுவதே கண்ணியமான காரியம் என்று நினைப்பது போல இருந்தது. அவ்வாறு அவன் சிறிது தூரம் சென்று கொண்டே இருக்க, தரையில் மணலின் மறைவில் கிடந்த ஏதோ ஒரு வஸ்து பளிச்சென்று மின்னி அவனது கவனத்தைக் கவர்ந்தது. அவன் அதை உற்று நோக்கிக் கீழே குனிந்து அந்த வஸ்துவைக் கையில் எடுக்க, அது ஒரு முழு ரூபாய் என்பது உடனே தெரிந்தது. இரண்டொரு நிமிஷ நேரம் வரையில் அவன் அதை உண்மையென்றே நம்பவில்லை. ஆனாலும், அது பட்டப் பகல் வேளையாதலாலும், தான் விழித்த விழியோடும், தெளிவான அறிவோடும் வழி நடந்து வந்துகொண்டிருந்த உணர்வு நன்றாக இருந்தமையாலும், அது உண்மையில் வெள்ளி ரூபாய்தான் என்கிற நிச்சயம் அவனது மனத்தில் எற்பட்டது. அந்த ரூபாயை அவன் எடுத்தவுடன், தான் அதை உடனே செலவிட்டுத் தன் குடும்பத்திற்கு ஆகவேண்டிய அவசர காரியங்களை நடத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனது மனத்தில் உண்டாகவில்லை. யாராவது அந்த வழியாய்ச் சென்றபோது, அந்த ரூபாய், அவரிடமிருந்து தவறிக் கீழே விழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், தான் அதை அவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற

21