உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

ராசசோழனைப் போரில் வென்று அந்நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படையெழுச்சியில் சோழரின் பழைய தலைநகராகிய ய உறையூரும் தஞ்சாவூரும் பாண்டிநாட்டுப் போர் வீரர்களால் கொளுத்தப்பட்டுப் போயின. பல மாடமாளிகை களும் கூடகோபுரங்களும் ஆடரங்குகளும் மணிமண்டபங் களும் இடிக்கப்பட்டு நீர்நிலைகளும் அழிக்கப்பெற்றன. முற்காலத்தில் சோழன் கரிகாற்பெருவளத்தான் என்பான் தன்மீது பட்டினப் பாலைபாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர்க்குப் பரிசிலாக வழங்கியிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் சோழநாட்டில் இடிக்கப்படாமல் விடப்பட்ட தென்றும் பிற எல்லாம் அழிக்கப் பட்டுவிட்டன என்றும் திருவெள்ளறையில் செய்யுளாகவுள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டொன்று' கூறுகின்றது. இதனால் இப்பாண்டி வேந்தன் படையெடுப்பில் சோணாடு எத்தகைய அழிவிற்குள்ளாயிற்று என்பதை நன்கறியலாம். போரில் தோல்வியெய்திய ராசராசசோழன் தன் உரிமைச் சுற்றத்தினருடன் தலைநகரை விட்டு நீங்கி வேறிடஞ் சென்றனன். வாகைசூடிய சுந்தர பாண்டியன், சோழர்க்கு இரண்டாந் தலைநகராக நிலவிய பழையாறை' நகர்க்குச் சென்று, அங்கு ஆயிரத்தளி அரண்

1. வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப்

பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று

நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே

திருவெள்ளறைக் கல்வெட்டு (செந்தமிழ் - தொகுதி 41, பக். 215) கல்வெட்டில் காணப்படும் இப்பாடலில் கூறப்பெற்ற கண்ணன் என்பார். சோழன் கரிகாற்பெருவளத்தான் மீது பட்டினப்பாலை என்ற நூலை இயற்றியுள்ள கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பெருமானே யாவர். இப் புலவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கி அந்நூலைத் திருமாவளவன் பெற்றுக் கொண்ட செய்தி கலிங்கத்துப் பரணியால் அறியக் கிடக்கின்றது. எனவே, இப் பெருந் தொகையோடு நூல் அரங்கேற்றப் பெற்ற பதினாறுகால் மண்டபத்தையும் அவ்வரசர் பெருமான் இக்கவிஞர் கோமானுக்கு வழங்கினன் போலும்.

2. இவ்வூர், கும்பகோணத்திற்கு மேற்புறத்திலுள்ள தாராசுரம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது. இதனைச் சூழ்ந்துள்ள முழையூர், பட்டீச்சுரம், திருச்சத்தி முற்றம், சோழமாளிகை, திரு மேற்றளி, கோபிநாத பெருமாள் கோயில், ஆரியப் படையூர், புதுப்படையூர், பம்பைப்படையூர், மணப் படையூர், அரிச்சந்திரபுரம், தாராசுரம், நாதன்கோயில் ஆகிய ஊர்களையும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் பெரிய நகரமாக விளங்கியது.

செந்தமிழ் 43-ஆம் தொகுதி, 4,5-ஆம் பகுதிகளில் யான் எழுதியுள்ள பழையாறை நகர் என்னுங் கட்டுரையில் இந் நகரைப் பற்றிய வரலாற்றைக் காணலாம்.