உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

101

கொண்டிருந்தானென்றும் சுந்தரபாண்டியன் அவனைக் கொன்று சினந்தணிந்தானென்றும் இவன் மெய்க்கீர்த்தி உணர்த்துகின்றது.1 இவ்வரலாறும் புலப்படவில்லை. வடஆர்க்காடு ஜில்லா திருப்பாற்கடலில் வரையப் பெற்றுள்ள இவனது பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றால்’ இப் போர் நிகழ்ச்சிக்குப் பிறகு கண்ணனூர்க் கொப்பம் இவன் ஆளுகைக் குட்பட்டிருந்தது என்பது நன்கறியக் கிடக்கின்றது.

இனி, இப்பாண்டி வேந்தனுக்குக் களிறுகளைத் திறை யாகக் கொடுத்த கருநாடராசன் வீரசோமேச்சுரன் மகன் வீரராமநாதனாக இருத்தல்வேண்டும். ஆகவே, அவன் சுந்தர பாண்டியனுக்குக் கப்பஞ் செலுத்திக் கொண்டு சோணாட்டில் ஒரு பகுதியை ஆண்டுவந்தனன் போலும்.

பிறகு இச் சுந்தரபாண்டியன் இலங்கை யரசனை வென்று, அவன்பால் யானைகளையும் பலவகை மணிகளையும் கப்ப மாகப் பெற்றான். அதன் பின்னர், இவ்வேந்தன் பல்லவ மன்ன னாகிய கோப்பெருஞ்சிங்கன் அனுப்பிய திறைப் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் அவனது தலைநகராகிய சேந்தமங்கலஞ்’ சென்று அதனை முற்றுகையிட்டுக் கைப்பற்றியதோடு அவனுடைய யானை குதிரைகளையும் பிற செல்வங்களையும் கவர்ந்துகொண்டான். பிறகு அவற்றை யெல்லாம் அவனுக்கே யளித்து அவனைத் தன் ஆணைக்கடங்கி நடக்கும் குறுநில மன்னனாக்கித் திரும்பினான். இப் போர்கள் எல்லாம் இவனது ப் ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய கி. பி. 1258-க்கு முன்னர் நிகழ்ந்தவையாதல் வேண்டும். ஆனால் எவ்வெவ்வாண்டில் ஒவ்வொன்றும் நடைபெற்றது என்பது இப்போது புலப்பட வில்லை.

1. 'நட்பதுபோ லுட்பகையாய் நின்ற-சேமனைக் கொன்று சினந்தணிந் தருளி'- (மெய்க்கீர்த்தி)

2. Ins. 702 of 1904.

3. சேந்தமங்கலம் என்பது தென்னார்க்காடு ஜில்லாவில் திருநாவலூர்க் கண்மையில்

உள்ளது.

4. S. I. I., Vol. V, No. 459.