உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

129

பாண்டியர் இறுதியில் ஜமீன்தார் நிலையை எய்தித் தென் பாண்டிநாட்டில் ஓர் ஊரில் இருந்து வருவராயினர்.

நம் தமிழகத்தின் தென்பகுதி தம் பெயரால் என்றும் நின்று நிலவுமாறு சரித்திரகாலத்திற்கு முன்தொடங்கிப் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையில் அங்கு ஆட்சிபுரிந்துவந்த தமிழ்வேந்தர்களான பாண்டியர்கள் தம் நாட்டை இழந்த சிறுமையுற்றுச் சீர்குலைந்தமை காலவேறுபாட்டினால் நிகழ்ந்த மாறுதலேயாம். ஆயினும், அவர்களுடைய மாரியன்ன வரையா வண்மையால் வெளிவந்துள்ள எடுப்பும் இணையுமற்ற தமிழ்நூல்கள் நம்மனோர் பண்டைப் பெருமையினை எந்நாட்டினர்க்கும் அறிவுறுத்தும் அரும்பெரு நிதியமாகவும் அறிவுச்சுடர் கொளுத்தி நமது அகவிருள் போக்கும் செஞ்ஞாயிறாகவும் அமைந்து அன்னோரை நினைவுகூர்தற்கு ஏற்ற கருவிகளாக நிலைபெற்றிருப்பது மகிழ்தற்குரியதாகும்.