உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுழைவுரை

vii

தாம் பிறந்த மண்ணின் பெருமைகள் பற்றித் 'திருப்புறம்பயத் தலவரலாறு' (1946) என்னும் நூலை இவரெழுதினார். இவருடைய 'செம்பியன்மாதேவித் தல வரலாறு' (1959) என்ற நூலும் இங்குக் கருதத் தக்க ஒன்றாகும். பூம்புகார் மாதவி மன்றத்தினரின் வேண்டுகோளை ஏற்று இவரெழுதிய 'காவிரிப்பூம்பட்டினம்' (1959) என்ற நூல் அம்மாநகர் பற்றிய முதல் வரலாற்று ஆய்வு நூல் என்னும் பெருமைக்குரியதாகும்.

அறிஞர் பண்டாரத்தார் தம் வாழ்நாள் முழுமையும் உழைத்துத் திரட்டிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து அவர் இயற்கையெய்திய பிறகு அவருடைய மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்மந்தம் 'இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்', 'கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள்' என்னும் தலைப்புகளில் 1961இல் நூல்களாக வெளிவர வழிவகை செய்தார்.

பின்னர், இந்த நூல்களில் இடம்பெறாத அரிய கட்டுரைகள் பலவற்றைப் பண்டாரத்தார் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் காணும் வாய்ப்பைப் பெற்ற நான், அவற்றைத் தொகுத்து அதன் தொகுப்பாசிரியராக இருந்து 1998இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் 'சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்' என்னும் பெயரில் நூலாக வெளிவருவதற்கு உதவியாக இருந்தேன். மிக்க மகிழ்ச்சியோடு அந்த நூலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற நூல் சோழர் வரலாறு குறித்துத் தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியதாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களுடைய வரலாற்று நாவல்களைப் படைத்தனர். உத்தம சோழனின் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்ற திரு. கே.ஏ.நீலகண்ட சாத்திரியாரின் கருத்தை அறிஞர் பண்டாரத்தார் உடையார்குடி கல்வெட்டுச் சான்றின் மூலம் மறுத்துரைத்ததோடு அவனது கொலைக்குக் காரணமாக அமைந்தவர்கள் சில பார்ப்பன அதிகாரிகளே என இந்தநூலில் ஆய்ந்து உரைக்கிறார். இந்த ஆய்வுத் திறத்தைக் கண்ட தந்தை பெரியார் இவரைப் பாராட்டியதோடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார்.

அறிஞர் பண்டாரத்தார், தானுண்டு தன் வேலை உண்டு என்ற கருத்தோடு மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பணியாற்றியவர்;