உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80




14. கரந்தைத் தமிழ்ச்
சங்கச் செப்பேடுகள்

நம் தமிழகத்தில் முற்காலத்தில் அரசாண்ட சேர சோழ பாண்டியர்களும் பல்லவர்களும் திருக்கோயில்களுக்கும் அந்தணர்க்கும் பிறர்க்கும் இறையிலியாக நிலங்கள் வழங்கும் போது தம் அறச்செயல்கள் என்றும் நின்று நிலவுமாறு அவற்றைச் செப்பேடுகளில் வரையச் செய்து தம் அரசாங்க முத்திரையுடன் உரியவர்களுக்கு அளிப்பது வழக்கம். அவர்கள் அங்ஙனம் செய்யுங்கால், அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாற்றோடு தம் வீரச்செயல்களை யாதல் தம் மெய்க் கீர்த்தியை[1] யாதல் முதலில் எழுதுவித்துப் பிறகு அப்போது தாம் செய்த அறச்செயலைத் தெளிவாகக் குறித்திருத்தல் காணலாம்.

அத்தகைய செப்பேடுகளும், நானூற்று முப்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற பிற்காலச் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அறவோலை செய்து அதுபற்றி வரைந்து வழங்கிய செப்பேடுகள் பலவாதல் வேண்டும். அவைகள் காலப்போக்கில் ஏற்பட்ட ஆட்சி மாறுதல்களால் இந்நாளில் கிடைக்காமற் போயின. கோயில்களிலிருந்த செப்பேடுகளுள் பல, உருக்கி விற்கப் பெற்றும் செப்புப் பாத்திரங்களாக மாறியும் போயின. அறியாமையால் நிகழ்ந்த அத்தகாத செயல்களால் மறைந்தொழிந்த வரலாற்றுண்மைகளும், அரிய செய்திகளும் அளவிட்டுரைக்கத் தக்கனவல்ல. எனினும், நிலத்திற் புதையுண்டு பல ஆண்டுகள் மறைந்து கிடந்த செப்பேடுகளில் சில இக்காலத்தில் ஆங்காங்கு அரிதிற் கிடைத்து நம் நாட்டின்


  1. மெய்கீர்த்தி என்பது பேரரசனுடைய மெய்ப் புகழையும் வரலாற்றையும் சிறப்புப் பெயர்களோடு இயற் பெயரையும் மாதேவியரின் பெருமையையும் ஆட்சியாண்டையும் கூறும் பல அடிகளாலமைந்த ஒரு செய்யுள் ஆகும். இது பெரும்பான்மை அகவலோசையும் சிறுபான்மை கலியோசையுங் கொண்டமைந்தது. தமிழ்வளம் நிறைந்த இம்மெய்க்கீர்த்திகள் எல்லாம் அவ்வவ் வேந்தர்களின் அவைக்களப் புலவர்கள் பாடியனவேயாம்.