உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

85


தம்பி என்பது அக்கல்வெட்டால் அறியப்படு கின்றது. இங்குக் குறிக்கப்பெற்ற ஆலம்பாக்க விசய நல்லூழான் நந்திவர்மனது தந்தையாகிய நந்தி வர்மப் பல்லவ மல்லனது அமைச்சர்களுள் ஒருவன். இச்செய்தி நந்தி வர்மப் பல்லவ மல்லவனது ஆட்சியின் அறுபத்திரண்டாம் ஆண்டில் வெளியிடப் பெற்ற[1] பட்டத்தாள் மங்கலம் செப்பேட்டினால் புலப்படுகின்றது. பெருங்கிணறு தோண்டு வித்த கம்பன் அரையனும் தன் தமையனைப் போலவே பல்லவ மன்னர்களது அரசாங்கத்தில் உயர்நிலையில் இருந்தவன் ஆதல் வேண்டும். அரையன் என்பது அரசனால் அளிக்கப்பட்ட பட்டமாகும். கம்பன் என்பது இவனது இயற்பெயர், எனவே, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கம்பன் என்பது இயற்பெயராக வழங்கிவந்த செய்தி ஈண்டு அறிந்து கொள்ளுதற்குரிய தொன்றாம். உடன் பிறப்பினராய்ப் பல்லவ மன்னர்களான நந்தி வர்மப் பல்லவ மல்லன், தந்தி வர்மன் என்போரது ஆட்சிக் காலங்களில் உயர்நிலையிலிருந்து அரசாங்கத்தை நடத்திவந்த இவ்விரு தலைவர்களும் ஆலம்பாக்கம் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள் என்பது 'ஆலம்பாக்க விசைய நல்லூழான்' என்ற சொற் றொடரால் நன்கு வெளியாகின்றது.

இவ்வாலம்பாக்கம், லால்குடி என்று தற்காலத்தில் வழங்கும் திருத்தவத்துறையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெருவழியில் 12 ஆவது மைலில் உள்ளது. இது பல்லவர்களது ஆட்சிக்காலங்களில் தந்தி வர்மமங்கலம் என்னும் பெயரை எய்தியிருந்தது; சோழ மன்னர்களது ஆட்சிக் காலங்களில் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று வழங்கிற்று; அந்நாளில் சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்றாகிய இராசேந்திரச் சிங்கவள நாட்டின் உண்ணாடுகளுள் ஒன்றான பொய்கை நாட்டிலுள்ள ஊராக இருந்தது. (Annual Report on Epig- raphy for 1905-06 page 63) திருவெள்ளறையிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணற்றைப் போல இவ்வாலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரி ஒன்றும் இருந்ததென்று கல்வெட்டுக்களால் புலப்படு கின்றது. வெவ்வேறு ஊர்களிலுள்ள பெருங்கிணற்றிற்கும் ஏரிக்கும் ஒரே பெயரிட்டு வழங்கப்பட்டுள்ளமை ஈண்டுணரத்


  1. Epigraphia Indica Volume XVIII No. 14