உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

103


குறிக்கப்பெற்றுள்ள சேய்நலூர், அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சண்டேசுவரநாயனார் திருவவதாரம் செய்தருளியதும் மண்ணியாற்றின் கரையில் உள்ளதுமான திருச்சேய்ஞலூரே யாகும். இத்திருச்சேய்ஞலூர் மிழலை நாட்டிலுள்ளது என்பது மேற்குறித்த கல்வெட்டால் புலப்படும் செய்தியாகும். இத்திருப்பதிக் கண்மையில் இரண்டுமைலில் மிழலை என்ற அழிந்த ஊர் ஒன்று உள்ளது. இஃது இப்பொழுது கும்ப கோணத்திலிருந்து நான்கு மைல் தூரத்தில் சென்னைக்கு போகும் பெருவழியில் உள்ளது. யாம் நேரிற் சென்று அதனைப் பார்த்த போது அழிவுற்ற நிலையிலுள்ள ஒரு பழைய சிவாலயம் அங்கே காணப்பட்டது. எக்காரணத்தாலோ அச்சிவாலயமும் அதனைச் சூழ்ந்துள்ள ஊரும் அழிந்து போய்விட்டன. அவ்வூரினர் அதற்கருகிலுள்ள களம்பரம் என்ற ஊரில் குடியேறியுள்ளனர். மிழலையும் அதிலுள்ள சிவாலயமும் பழைய நாளில் நல்ல நிலையில் இருந்திருத்தல் வேண்டும். அழிவுற்ற அவ்வாலயத்திலுள்ள படிமங்கள் அதில் ஒரு புறத்தில் புதியதாக அமைக்கப் பெற்றுள்ள ஒரு சிறு அறையுள் வைக்கப்பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. அவ்விடத்திற் பெருமிழலைக் குறும்ப நாயனாரது படிமம் இன்றும் உள்ளது. ஆகவே, புலவர் பெருமானாகிய சேக்கிழார், குறும்பநாயனாரது திருப்பதியாகக் கூறியுள்ள பெருமிழலை மிழலைநாட்டிலுள்ள இம்மிழலையே யாதல் அறிந்து கொள்க.

இனி, சேக்கிழாரடிகள் குறும்பநாயனாரது திருப்பதி பெருமிழலை என்றன்றோ உரைத்துள்ளனரெனின், கூறுவாம் பாபநாசம் தாலுக்காவிலுள்ள மிலட்டூர் முற்காலத்தில் பெருமிலட்டூர் என்று வழங்கிற்று என்பது 'நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்துப் பெருமிலட்டூர் ஊரார் யாண்டு இருபத்தொன்பதாவது முதல் காசு ஒன்றுக்கு ஆட்டைவட்டன் முக்குறுணி நெல்லுப் பொலிசையாகத் தஞ்சாவூர் ஸ்ரீராஜ ராஜேஸ்ரம் உடையார் பெரும் பண்டாரத்தேய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளக்கக் கடவர்களாகக் கொண்ட காசு இருநூறினால் ஆண்டாண்டு தொறும் அளக்கக் கடவநெல்லு ஐம்பதின் கலம் (S.I.I. Vol II. No. 6) என்னும் கல்வெட்டினால்