உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தினராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் பாண்டிநாட்டுத் திருப்புத்தூர் தேவாரப் பதிகத்தில் மூன்றாஞ் சங்கத்து[1] நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைக் குறித்திருக்கின்றனர்.[2] இதனால் சுவாமிகள் இருவரும் மூன்றாஞ் சங்க காலத்திற்குப் பின்னரே தமிழ்நாட்டில் விளங்கியவர்களென்பது போதரும். அன்றியும், திருஞான சம்பந்தசுவாமிகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கிய வரென்று காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபஸர் சுந்தரம் பிள்ளைய வர்கள் நன்காராய்ந்து தமது “திருஞான சம்பந்தர் காலம்“ என்னும் ஆங்கில நூலிற் கூறியிருக்கின்றனர்.[3] மூன்றாஞ்சங்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய காலங்களிலும் நின்று நிலவியதாகலின், திருஞான சம்பந்தசுவாமிகள் மூன்றாஞ்சங்ககாலத்திற்குப் பன்னூற்றாண்டு கட்குப் பின்னர் இருந்தவரென்பது நன்கு விளங்குகின்றது. இன்னும் தமிழ்மாது செழிப்புற்று மகோன்னத நிலைமையி லிருந்த மூன்றாஞ் சங்ககாலத்தில், தனித்தமிழ்ச் செய்யுளாகிய ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என்னும் நான்கனுள், பெரும் பான்மை ஆசிரியப்பாவும் வெண்பாவும் சிறுபான்மை எஞ்சிய விரண்டு பாக்களும் நடைபெற்று வந்தனவேயன்றி, நம் சுவாமிகள் காலத்துப் பெருவழக் காகக் காணப்படும் விருத்தப்பாக்கள் நடைபெற்றதில்லையென்பதும் மேற்கூறியதை வலியுடைத் தாமாறு செய்தலைக் காண்க. இதுகாறுங் கூறியவற்றாற் சுவாமிகள் மூன்றாஞ்சங்கத்திற்குப் பிந்தியவரென்பது நன்கறியக் கிடக்கின்றது. மூன்றாஞ் சங்ககாலத்தில் (அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) இயற்றப்பெற்ற நூலாகிய சிலப்பதிகாரத்தில் மேற்கூறிய சரிதம் மிகச்சுருக்கமாய்ச் சொல்லப் பட்டிருக் கின்றமையால் இந்நூல் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னரே இச்சரிதம் நடை பெற்றிருக்க வேண்டுமென்பது தெற்றென விளங்குகின்றது. இதனாற் சிலப்பதிகாரமியற்றப் பெற்ற காலத்திற்கு (அதாவது மூன்றாஞ்


  1. கடைச்சங்கம்
  2. “நற்பாட்டுப்புலவனாய்ச் சங்கமேறிநற் கனகக்கிழி தருமிக்கருளினேன் காண்“ திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்புத்தூர்ப்பதிகம் 3-ம் செய்யுள்.
  3. Cf. Tamilian Antiquary No.3