உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


“யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற”

என்னும் குறள்வெண்பாக்களைச் சிறிதும் படித்தறிந்த வராகக் கூடத் தோன்றவில்லையே யென்று மிக வருந்த வேண்டியதாயிருக்கிறது.

இந்நூலுடையார் மருத்துவமுறைகளிற் சிலவற்றையறிந்துள்ளா ரென்பதுண்மையே, ஆனால் அருமையும் பெருமையும் வாய்ந்த பழைய நூலாகிய திருக்குறளைத் தாமியற்றியதாகக் கூறினால் அக்கூற்றைத் தமிழகத்தினர் அங்கீகரிப்பாராவென்று ஆராயாது இங்ஙனம் கூறியது இவரது அறியாமையின் பாற்படு மேயன்றிப் பிறிதின்றென்க. அன்றியும் இவரியற்றிய ஞானவெட்டி யென்ற நூலில் எத்தனையோ செய்யுட்கள் பிழையுடையனவாகக் காணப்படுகின்றன.

இனி, 'ஞானவெட்டி' என்னும் சொற்றொடரில் 'வெட்டி' யென்பதின் பொருள் வழியாம்; தஞ்சை ஜில்லாவிற் கடலைச் சார்ந்த பிரதேசங்களில் வழியை வெட்டியென்று இன்றும் வழங்கி வருகின்றனர். ஆகவே, இந்நூலும் அப்பிரதேசங்களில், இற்றைக்கு இருநூறு (200) வருடங்கட்கு முன்னரிருந்த ஒருவராலியற்றப் பெற்றதாதல் வேண்டும்.

இதுகாறும் கூறியவாற்றால், ஞானவெட்டியையியற்றினோர் திருக்குறளருளிய திருவள்ளுவனாரல்லரென்பதும் அந்நூல், இற்றைக்கு இருநூறு வருடங்கட்குமுன்னர், தஞ்சை ஜில்லாவிற் கடலைச் சார்ந்த பிரதேசத்திருந்த ஒருவராலியற்றப்பெற்ற தென்பதும், தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் திருக்குறளைத் தவிர வேறொரு நூலும் இயற்றவில்லை யென்பதும் நன்கு விளங்கி நிற்றல் காண்க.