உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

153


மேலகரம் (5) வேலங்குடி, அம்மையப்புரம், தென்அளூர், கருப்பூர், மருவூர், இராசேந்திர சோழநல்லூர், சுங்கந்தவிர்த்த சோழ நல்லூரான (6) திருமலைராசபுரம், சமுத்திர... புரம், ஆக இந்த அகரங்களில் வாரியன் கரணத்தானுக்கு நிருபம் தங்கள் அவதாவக (7) க்களை ராஜ ஸபீக்கனை பிரதாநிஜோடி கரணிக்க ஜோடி தலையாரிக்கும் மாவடை மரவடை குளவடை மற்றும் (8) எப்பேர்ப்பட்ட பல உபாதிகளும் இழித்துவிட்ட அளவுக்குச் சந்திராதித்தவரையும் சர்வ மானியமாக சுகமே இருக்கவும் (9) ராஜாவின் அருளிச் செயல்படிக்கு மந்திரமூர்த்தி வெட்டியது[1]' என்பதாம்.

இக்கல்வெட்டு, சாளுவமன்னனாகிய திருமலைராயன் என்பான் சுகம் 1337-ஆம் ஆண்டில் சில ஊர்களைச் சர்வமானியமாக விட்ட செய்தியை உணர்த்துகின்றது. எனவே, இது, கி.பி. 1455-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொன்றாம். இக்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள சாளுவத் திருமலைராயன் என்பவனே காளமேகப்புலவரால் 'கல்யாணிச் சாளுவத் திருமலைராயன் மந்தரப் புயனாங் கோப்பையனுதவு மகிபதி விதரணராமன்’ என்று புகழ்ந்து பாடல்பெற்ற பெருமை வாய்ந்தவன் என்பது நன்கு துணியப்படும் சாளுவமன்னனாகிய இத்திருமலைராயன் என்பான் விசயநகர வேந்தர்களது பிரதிநிதியாகவிருந்து சோழ மண்டலத்தை ஆட்சிபுரிந்தவன் என்பது ஆராய்ச்சியால் புலப்படுகின்றது. இவன் காலத்தில் விசய நகரத்தில் வீற்றிருந்து அரசாண்ட மன்னர்கள் மல்லிகார்ச் சுனராயர் விருபாக்ஷராயர் என்போர். இவர்களது பிரதிநிதியாக விருந்து தமிழ் நாட்டை ஆட்சிபுரிந்து சாளுவத் திருமலை ராயன் கி.பி. 1455-ஆம் ஆண்டில் நிலவிய செய்தி மேலே குறித்துள்ள தஞ்சைக் கல்வெட்டால் நன்கு அறியப்படுகின்றது. ஆகவே, இம்மன்னனால் ஆதரிக்கப்பெற்ற நம் காளமேகப் புலவர் கி.பி.

பதினைந்தாம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவராதல் வேண்டும். இங்ஙனம் கல்வெட்டுக்களின் துணைகொண்டு உறுதிசெய்யக்கூடிய பிற புலவர்களது காலங்களையும் ஆராய்ந்து அமயம் நேர்ந்துழி நம் தமிழ்ப் பொழிலில் வெளியிடுவேன்.

  1. S.I.I. Vol. II No. 23, Page 118.