உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

155


பொருட் சுவையும் ஒருங்கே அமையப் பெற்றது; அகப்பொருள் துறைகள் அமைந்த பல இனிய பாடல்களையுடையது; பக்திச் சுவையொழுகும் தன்மையது. இத்துணைச் சிறப்புவாய்ந்த இவ்வந்தாதியைச் சிராமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது இயற்றியருளிய கவிஞர் கோமானாகிய நாராயணன் என்பார் ஒப்பற்ற சிவபக்தியுடைய வராயிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். இவர் இவ்வந்தாதியிலுள்ள பாடல்கள் எல்லாவற்றையும் திருச்சிராப் பள்ளியிலுள்ள மலையில் பொறித்திருப்பது குறிப்பிடத்தக்க தாகும். அவற்றைக் கல்வெட்டு லாகாவிலுள்ள அறிஞர்கள் படிஎடுத்துத் தென்னிந்தியக் கல்வெட்டுப் புத்தகம் நான்காம் தொகுதியில் வெளியிட்டிருக்கின்றனர். (South Indian Inscriptions Vol. IV No. 167) அவற்றுள், சில பாடல்களில் சீர்களும் சிலவற்றில் சில எழுத்துக்களும் உதிர்ந்து போயிருந்தமையின் அவ்விடங்களில் புள்ளியிட்டுப் பதிப்பித்துள்ளனர். கல்லில்வரையப் பெற்றுள்ள இவ்வந்தாதியின் பதினைந்து பாடல்களை ஒருவாறு திருத்திப் 'பொழில்' அன்பர்கள் படித்தின்புறுமாறு ஈண்டு வெளியிட்டுள்ளேன். இவ்வந்தாதியின் இறுதியிலுள்ள கட்டளைக் கலித்துறை யொன்றும் வெண்பாவொன்றும் இதனை இயற்றிய புலவரது வரலாற்றைச் சிறிது உணர்த்துகின்றன. அவை,

‘மற்பந்த மார்பன் மணியன் மகன்மதின் வேம்பையர்கோன்
நற்பந்த மார்தமிழ் நாராயணனஞ் சிராமலைமேற்
கற்பந்த னீழலில் வைத்த கலித்துறை நூறுங்கற்பார் பொற்பந்த நீழ லரன்றிருப் பாதம் பொருந்துவரே’

’மாட மதுரை மணலூர் மதிள்வேம்பை
யோடமர்சே (ய்)ஞலூர் குண்டூரிந் நீடிய நற்பதிக்கோ னாரா யணனஞ் சிராமலைமேற் கற்பதித்தான் சொன்ன கவி’

என்பனவாம். இவற்றால், சிராமலையந்தாதியின் ஆசிரிய ராகிய நாராயணன் என்பார் மணியன் என்பவரது புதல்வர் என்பதும் வேம்பத்தூரில் பிறந்தவர் என்பதும் மதுரை, மணலூர், வேம்பத்தூர், சேய்ஞலூர், குண்டூர் என்ற ஊர்களில் வாழ்ந்தவர் என்பதும் வெளியாகின்றன. இவர் பாடிய சிராமலை