உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164





29. தமிழிசை வளர்ந்த வரலாறு

நம் தாய் மொழியாகிய தமிழ், இயல் இசை, நாடகம் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டு அறிஞர்களால் ஆராயப்பட்டு வந்தது என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களால் அறியலாம். வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட பெருநிலப் பரப்பை ஆட்சிபுரிந்த தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் முத்தமிழையும் போற்றி வந்தனர் என்பது கடைச்சங்க நூல்களாலும் கோயில்களில் காணப்படும் பல கல்வெட்டுக் களாலும் நன்கறியப்படுகின்றன. எனினும், தமிழ்ச் சங்கம் நிறுவி முத்தமிழையும் வளர்த்த பெருமையுடையவர்கள் பாண்டிய வேந்தரேயாவார். கடைச்சங்க நாளில் இயற்றமிழ் நூல்களைப் போல் எத்தனையோ இசைத்தமிழ் நூல்களும் இயற்றப்பட்டு வழக்கிலிருந்து வந்தன என்பது தொல்லுரையாசிரியர்களின் கூற்றுக்களால் வெளியாகின்றது. அந்த நாட்களில் இசைத்தமிழ் எய்தியிருந்த உயர்நிலையை உணர்தற்கு முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் ஒன்றே போதுமானது எனலாம். அப்பெருங் காப்பியத்திற்குப் பேருரை கண்ட அடியார்க்கு நல்லார் தம் காலத்திற்கு முன்னரே பழைய இசைத் தமிழ் நூல்கள் இறந்துவிட்டமையால் எஞ்சியிருந்த இசை நுணுக்கம், இந்திர காளியம் முதலான சில நூல்களின் துணைகொண்டு அப்பெருநூலுக்குத் தாம் ஒருவாறு உரை எழுத முடிந்தது என்று உரைப்பாயிரத்தில் கூறியிருப்பது இசைத்தமிழின் வீழ்ச்சியை உணர்த்துவதாக உளது.

இனி, அடியார்க்கு நல்லார் காலத்தில் இசைத்தமிழ் அத்தகைய நிலையிலிருந்ததற்குக் காரணம் யாதெனில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையில் நம் தமிழ்நாடு முழுவதும் பிறமொழி பேசும் அயலார் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையேயாம்.