உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174




31. வழுக்கி வீழினும்

சோழ நாட்டிலேயுள்ள தஞ்சாவூரைப் பலர் பார்த்திருக்கலாம். அப்பெருநகர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழர் பேரரசை நிறுவிச் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழ மன்னர்களுக்குத் தலைநகராக விளங்கிய பெருமையுடையது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் இராசராசசோழன் எடுப்பித்த இராச ராசேசுவரம் என்னும் பெருங்கோயில் அந்நகரை இக்காலத்தும் அழகுபடுத்திக் கொண்டிருப்பதைக் காணலாம். பிற்காலத்தில் அரசாண்ட நாயக்கரும் மராட்டியரும் அந்நகரையே தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தமை சரித்திரம் படித்தோர் அறிந்ததே. அங்கு அவர்களுடைய அரண்மனையை இன்றும் காணலாம். அதில் கல்வி கேள்விகளில் வல்ல இரண்டாம் சரபோஜி மன்னன் அமைத்த ‘சரஸ்வதி மஹால்‘ என்ற நூல் நிலையம் ஒன்று, பல்லாயிரக்கணக்கான வடமொழி, தென் மொழி, தெலுங்கு ஏட்டுப் பிரதிகளையும் அச்சிட்ட புத்தகங்களையும் தன்னகத்துக் கொண்டு நிலவுகின்றது. அப்புத்தக சாலை எத்திசையிலுமுள்ள அறிஞர்களைத் தன்பால் இழுக்கும் இயல்பினதாகும். டாக்டர் பர்னல் என்ற பேரறிஞர் அதிலுள்ள வடமொழி ஏட்டுப் பிரதிகளுக்கு ஒரு பட்டியும், திருவையாற்றுக் கல்லூரியில் தமிழாசிரியராயிருந்த காலஞ்சென்ற எல்.உலகநாத பிள்ளை தமிழ் ஏட்டுப் பிரதிகளுக்கு ஒருபட்டியும் தயாரித்துள்ளமை அறியத்தக்கது.

இவ்வாறு பண்டைப் பெருமைகளோடு இக்காலத்தும் சிறந்து விளங்கும் அம்மாநகரின் வடபால் அதன் வட எல்லையாக வடவாறு என்ற ஆறு ஒன்று ஓடுகின்றது. அது, முற்காலத்தில் வீரசோழ வடவாறு என வழங்கி வந்தது என்று தஞ்சை இராசராசேசுவரத்துக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எனவே, அது, கி.பி.907 முதல் 953 வரையில் தஞ்சாவூரிலிருந்து