உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8





33. தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம்

நம் தமிழ்மொழி பழமைவாய்ந்த சிறந்த மொழிகளுள் ஒன்று; இலக்கண வரம்பும் சொல் வளமும் ஒருங்கே அமையப் பெற்றது; தொன்று தொட்டுப் பேரறிஞர்களால் போற்றி வளர்க்கப்பெற்றுவரும் பெருமையுடையது; இயல், இசை, நாடகம் என முத்தமிழாக அறிஞர்களால் ஆராயப்பெற்றது; கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகளுக்குத் தாய்மொழியாயுள்ளது. இவ்வுண்மையினை அம்மொழியாளர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும், காய்தல் உவத்தலின்றி நடுவு நிலைமையுடன் மொழிகளை ஆராயும் பேரறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். வடநாட்டு மொழிகள் எல்லாவற்றிற்கும் வடமொழி தாய்மொழியாயிருத்தல் போல், தென்னாட்டிலுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகட்குத் ‘திராவிடி' என்ற தாய்மொழி ஒன்று இருந்தது என்பது தமிழரல்லாத பிற மொழியாளர் சிலருடைய கொள்கை. அஃதுண்மையாயின் பல மொழிகட்குத் தாய்மொழியாகவுள்ள வடமொழி இக்காலத்தும் தன் பெருமை குன்றாமல் சிறந்த நிலையில் இருத்தல் போல், தென்னாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியாக ஒரு சிலரால் சொல்லப்படும் 'திராவிடி' என்ற மொழியும் இந்நாளில் நம் தென்னாட்டில் நூலளவிலாவது இருத்தல் வேண்டுமன்றோ? அத்தகைய மொழி ஒன்று முற்காலத்தில் நம் நாட்டில் வழக்கில் இருந்தது என்பதற்கு எத்தகைய சான்றுகளும் யாண்டும் கிடைக்கவில்லை என்பது அறிஞர்கள் பலரும் அறிந்த தொன்றாகும்.

எனவே, 'திராவிடி' என்ற மொழி யொன்றை அதன் பெயரளவில் தாமே புதிதாகப் படைத்துக் கொண்டு, அது தமிழ், தெலுங்கு முதலான மொழிகளுக்குத் தாய்மொழி என்று கூறுவதற்குச் சிலர் முன் வந்தமை அறியாமையால் நிகழ்ந்த