உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


தமிழ் மொழியிலுள்ள பல்வகைப்பட்ட செய்யுட் களுக்கு உரிய இலக்கணங்களையும் அப்பொருளதிகாரத்தி லுள்ள ஒன்பது இயல்களுள் ஒன்றாகிய செய்யுளியல் விரித் துரைப்பது அறியத் தக்கதாகும். தொல்காப்பியம் இயற்றப்பெற்ற காலத்தில் புதிய ஆண்டு ஆவணி மாதத்தில் தொடங்கியிருத்தல் வேண்டும் என்பது அதிலுள்ள சூத்திரத்தால் அறியக்கிடத் தலால், அது பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றிய பழந்தமிழ் நூலாதல் வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே, அது தமிழ்மொழியிலுள்ள ஆதிகால நூலாதல் தெள்ளிது. அதற்கு இளம்பூரண அடிகள், பேராசிரியர், கல்லாடர், தெய்வச்சிலையார், சேனாவரையர், நச்சினார்க் கினியர் ஆகிய புலவர் பெருமக்கள் அறுவர் உரை எழுதியிருப்பதே அதன் பழமையை நன்கு உணர்த்துவதாகும்.

இனி, தொல்காப்பியத்திற்குப் பிற்பட்ட கால இலக்கியச் சரிதத்தைக் கடைச் சங்க காலம், இருண்டகாலம், பல்லவ பாண்டியர் காலம், சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், அன்னியர் ஆட்சிக் காலம் என்று பிரித்து ஆராய்வது அமைவுடையதாகும்.

கடைச்சங்க காலம்

மதுரை மாநகரில் பாண்டிய அரசர்களால் நிறுவப்பெற்று நடை பெற்று வந்த தமிழ்ச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் நிகழ்ந்த களப்பிரர்களின் படையெழுச்சியால் அழிந்து போய் விட்டது. அதற்கு முற்பட்ட காலத்தைத் தான் கடைச்சங்ககாலம் என்பர். கிருஸ்து பிறப்பதற்கு முன் சில நூற்றாண்டுகளாவது இச்சங்கம் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இதற்கு முன்னர் முதற்சங்கமும் இடைச் சங்கமும் வெவ்வேறுகாலங்களில் நடைபெற்றுள்ளமையால் இது கடைச்சங்கம் என்று வழங்கப்படுகிறது. முதல் இடைச் சங்க நூல்களுள் தொல்காப்பியம் தவிர வேறு நூல்கள் இக்காலத்தில் கிடைக்காமையால், அவ்விரு சங்ககாலங்களின் இலக்கியச் சரிதம் ஆதிகாலப் பகுதியில் கூறப்பட்டது.