உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

189


இனி, காரைக்காலம்மையார் நூல்களும், திருமூல நாயனாரது திருமந்திரமும், முத்தொள்ளாயிரம் என்ற நூலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலாதல் ஆறாம் நூற்றாண்டிலாதல் இயற்றப் பட்டிருத்தல் வேண்டும். இவற்றுள் முத்தொள்ளாயிரத்தில் இப்போது கிடைத்துள்ள பாடல்கள் நூற்றொன்பதாகும். எனவே, அஃது இறந்துபோன தொன்னூல்களுள் ஒன்று என்பது தேற்றம்.

பல்லவ பாண்டியர் காலம்

இது, தமிழ் நாட்டின் வடபகுதியில் பல்லவர் பேரரசும், தென்பகுதியில் பாண்டியருடைய முதற் பேரரசும் நடைபெற்ற காலமாகும். இக்காலப் பகுதி கி.பி. 600 முதல் கி.பி. 900 வரையில் அமைந்தது எனலாம். இந்நூற்றாண்டுகளில் சமய குரவர்கள் தோன்றி ஊர்தோறும் சென்று, இறைவன் மீது திருப்பதிகங்கள் பாடியருளிப் பத்தி நெறியை யாண்டும் பரப்பிவந்தமை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முதல் இடைப்பகுதிகளில் திருநாவுக்கரசரும், அந்நூற்றாண்டின் இடைப்பகுதியில் திருஞான சம்பந்தரும், அந்நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் சுந்தரமூர்த்திகளும் திகழ்ந்தவர்கள் ஆவர். அப்பெருமக்கள் மூவரும் பாடியருளிய திருப்பதிகங்கள் தேவாரப் பதிகங்கள் என வழங்கப் பெறும். அவை, சைவத் திருமுறைகள் பன்னிரண்டுள் முதல் ஏழு திருமுறைகளில் அடங்கியிருத்தல் அறியத்தக்கது. திருக்கயிலாய ஞானஉலா பொன்வண்ணத் தந்தாதி முதலியவற்றைப் பாடிய சேரமான் பெருமாளும் இக்காலத்தவரே. இனி, வைணவசமய குரவராகிய பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசையாழ்வார் என்போர் நிலவிய காலமும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியேயாம்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார் ஆகிய வைணவ சமயப் பெரியார் இருந்துள்ளனர். அவர்கள் பாடிய நூல்களும் பதிகங்களும் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ளன.