உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


முதலில் செய்யுள் தோன்றியகாலம் யாதென ஆராய்ந்து காண முடியாத அத்துணைத் தொன்மையும் பெருமையும் வாய்ந்த நம் தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள நம்மனோர், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப் பெற்ற செய்யுளே இல்லாத தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள ஆந்திரர் பாற் காணப்படும் தாய்மொழிப் பற்றைப் பார்த்தாயினும் தாய்மொழித் தொண்டில் ஈடுபட்டு உண்மைத் தொண் டாற்றுவார்களாக.

இனித் தெலுங்கு மொழியில் இயற்றப்பெற்ற முதல் செய்யுள் நூல் நன்னயப்பட்டர் எழுதியுள்ள மகாபாரதமாகும். இதற்கு முந்திய செய்யுள் நூற்கள் அம்மொழியில் இல்லை என்று அம்மொழியில் வல்ல அறிஞர்கள் கூறுகின்றனர். மகாபாரதத்தைத் தெலுங்கு மொழியில் செய்யுளாக எழுதிய நன்னயப்பட்டர் என்பார் கி.பி. 1022 முதல் கி.பி. 1063 வரையில் கோதாவரி கிருஷ்ணன் என்ற இருபேராறுகளுக்கும் இடையிலுள்ள வேங்கை நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த கீழைச் சளுக்கிய மன்னனாகிய முதல் இராசராசனது அவைக்களப் புலவராக விளங்கியவர். ஆகவே, இவ்வாசிரியர் வாழ்ந்தகாலம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியாகும். எனவே தெலுங்கு மொழியில் செய்யுள் நூல் முதலில் தோன்றிய காலமும் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியேயாகும் என்பது நன்கு வெளியாகின்றது. நம் தமிழ்மொழியிலுள்ள சிறந்த இலக்கியங்கள் எல்லாம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இயற்றப் பெற்றவை என்பது ஈண்டு யாவரும் அறிந்துகொள்ளுதற் குரியதொன்றாம்.

3. சேனாவரையர். தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், கல்லாடர், தெய்வச்சிலையார், சேனாவரையர், நச்சினார்க் கினியர், பேராசிரியர் முதலானோர் உரை எழுதியுள்ளார். சேனாவரையரது உரை சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உளது. சொல்லதிகார உரைகளுள் சேனாவரையரது உரையே திட்பநுட்பம் வாய்ந்து கற்போர்க்குக் கழி பேருவகை பயக்கும் பெருமை பெற்றதென்பர். இச்சேனாவரையரது வரலாறு சிறிதும் புலப்படவில்லை. ஆனால் பாண்டிநாட்டில் பழைய