உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


பட்ட கொங்கணமும் துளுவமும் கொடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின் குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடி யேற்றினார் போலும்' :- என்பதாம் (1). (1) நம் தமிழ் மொழியில் கலந்து வழங்கும் திசைச்சொற்கள் எவ்வெந்நாடு களிலிருந்து வந்துள்ளன என்பதை விளக்க வந்த உரையாசிரிய ராகிய தெய்வச்சிலையார், குமரியாற்றின் தென்கரையில் கொல்லம் என்னும் நாடுமுன்னர் இருந்தது என்றும், அதனைக் கடல்கொண்ட பின்னர் அவ்வாற்றிற்கு வடக்கே புதிய கொல்லத்தை அமைத்து, மக்கள் அங்குக் குடியேறினர் என்றும், நுண்ணிதின் ஆராய்ந்து எழுதியிருப்பது அரியதோர் உண்மைச் செய்தியாகும்.[1] எனவே, இப்போதுள்ள கொல்லத்தைப் புதிதாக அமைத்து மக்கள் குடியேறிய காலத்தில் தான் கொல்லம் ஆண்டும் முதலில் வழங்கத் தொடங்கிற்று என்பது உறுதியெய்துதல் காண்க. இவ்வுண்மைக் 'கொல்லந் தோன்றி' இரு நூற் றைம்பத்திரண்டாம் ஆண்டு என்ற கல்வெட்டுத் தொடர்மொழிகள் வலியுறுத்தி நிற்றல் உணரற்பாலதாகும்.

கி.பி. 822 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கடல் கோளால் பழைய கொல்லம் அழிந்துவிட்டது என்றும் கி.பி. 825ஆம் ஆண்டில் புதிய கொல்லம் அமைக்கப்பட்டது என்றும் துடிசைக் கிழார் திருவாளர் அ.சிதம்பரனார் அவர்கள் எழுதியிருப்பது ஈண்டு அறிந்து கொள்ளுதற் குரியதாகும் (1). கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு சேரமான் பெருமாள் நாயனார் கைலாயஞ் சென்றனர் என்பது ஆராய்ச்சியால் அறியப்படுதலின் (2) அக்காலத்தில் கொல்லம் ஆண்டு தொடங்கியிருத்தற்கு ஏது சிறிதும் இல்லை என்க.

6. ஒரு பழைய வழக்கம் :- இக்காலத்தில் இயற் பெயருக்கு முன்னர் மகாராஜராஜஸ்ரீ என்பதை மரியாதைக்கு அறிகுறியாகச் சேர்த்து எழுதுகின்றனர். நமது தமிழன்னைக்குத் தொண்டு புரிவதில் முன்னணியில் நிற்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் இயற்பெயருக்கு முன்னர் மரியாதைக்கு


  1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை – பக்கம். 219.