உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

221


தெலுங்கில் இதனை 'மிரியபுகாய்' என்று கூறுவார்; மிரியம் என்பதற்கு மிளகு என்று பொருளாம். மலையாளத்தில் இதனைக் ‘கப்பல் மிளகு' என்று வழங்குவர். இது அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலமாய் அங்குவந்த காரணம்பற்றி அங்ஙனம் வழங்கி வருகின்றனர் போலும். இராசராசன் குலோத்துங்கன் முதலான சோழ மன்னர்கள் சர்க்கரை, மிளகு, சீரகம், புளி முதலியவற்றை வாங்குவதற்குத் திருக்கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருக்கின்றனர். ஆனால் அதில் மிளகாய் மாத்திரம் காணப் படாமைக்குக் காரணம் அந்நாளில் நம் தமிழகத்தில் அஃது இல்லாமையே யாகும்.

4.கத்தரிக்காய் :- இஃது அமெரிக்காவிலிருந்து மரக்கலத்தின் வழியாய் வங்களாத்திற்குக் கொண்டு வரப்பட்டுப் பிறகு தெலுங்கு நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் வந்தது. தெலுங்கில் இதனை 'வங்காய' என்று வழங்குவர்; வங்காளத்திலிருந்து வந்தது என்பது இதன் பொருளாகும்.

5. காப்பி :- இஃது அரபிமொழியாகும். இஃது அரேபியாவிலிருந்து முதலில் பிரஞ்சு தேயத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அந்நாட்டினரும் இதனைப் பருகப்பழகினர். பின்னர், பிரஞ்சுதேய மக்கள் நம் தமிழ்நாட்டிற்கு வாணிகத்தின் பொருட்டு வந்தபோது அவர்களால் இது நம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. நம் நாட்டினரும் இதனைப்பருக நன்குபழகினர். வடநாட்டினர் இதனைப் பருக இன்னும் பழகாமைக்குக் காரணம் அவர்கள் பிரஞ்சு தேய மக்களோடு நெருங்கிப் பழகாமையேயாகும். நம் தமிழ் மக்கள் முன்னாளில் பிரஞ்சு தேயத்தாரோடு பெரிதும் நெருங்கிப்பழகியவர்கள் என்பதும் சிலகாலம் நம் தமிழ்நாடும் அன்னோர்களது ஆட்சியின் கீழ் இருந்ததென்பதும் இந்து தேயத்தின் பண்டை வரலாற்றை அறிந்தோர் யாவரும் நன்குணர்ந்தனவேயாம். ஆகவே, பிரஞ்சு மக்களிடத்திருந்தே நம் தமிழகத்தினர் காப்பியைப் பருகக் கற்றுக் கொண்டனர் என்க.

6. தேயிலை :- இது சீனதேயத்துப் பொருளாகும். இதனை அங்குத் 'தே' என்று வழங்குவர். ஆங்கிலேயர் சீனர்களிடமிருந்து தேயிலை நீரைப் பருகக் கற்றுக்கொண்டனர்.