உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியப் பொதுப் பாயிரம்

237


பொறை யென்பது, மலையு நிலனும் போலப் பொறுக்க வல்லனாகையு மென்றவாறு.

நிறையு மென்பது, மறை புலப்படாமை நிறுக்கு முள்ளமு மென்றவாறு.

பொச்சாப்பின்மையு மென்பது, அற்றப்படாத செறிவுடைமையு மென்றவாறு.

அறிவு மென்பது, நன்றாயினும் தீதாயினு மொன்றினை யுள்ளவகையா னுணர்வதல்லது, நல்லதனைத் தீதாகவுந் தீயதனை நன்றாகவுங் கொள்ளாது, செவ்வனுணர்தலு மென்றவாறு.

உருவு மென்பது, அவர்போலக் காண்பார்க் கினிதாகிய தோற்றமு மென்றவாறு.

ஆற்றலுமென்பது, எவ்விடத்துந்துளங்காது கேட்போர்க்குப் பயன்படுதலு மென்றவாறு.

புகழு மென்பது, மணி போல வின்னா னென்றுல கறியப் படு மொளியுடைமையு மென்றவாறு.

சொற்பொருளுணர்த்துஞ் சொல்வன்மையு மென்பது, தன்னாலுணர்த்தப்படும் பொருள் மாணாக்கருக் கினிதுணருமாறு சொல்லும் வன்மையு மென்றவாறு. எனவே, குண்டிகை பருத்திப் போலச் சொல்ல நினைந்த பொருள் சொல்ல மாட்டாதானு, மடற்பனை போல விடர்ப்படச் சொல்லுவானுங், கழற் குடம் போலத் தனக்குள்ளதெல்லா மொருகாலே சொல்லி மாணாக்கன் மனங்கொள்ளாமை மயங்கக் கூறுவானுமல்ல னென்றவாறு.

கற்போர் நெஞ்சங் காமுறப் புனைதலு மென்பது, முடத் தெங்குபோல யான் வழிபடப் பிறர்க்குரைத்தா னென்றானும், யான் வழிபாடு பிழைத்தற்குக் கேடு சூழ்ந்தா னென்றானு நினையாமன் மாணாக்க ரன்பு செய்யப்படுதலு மென்றவாறு.

இன்னோரன்ன தொன்னெறி மரபின ரென்பது, இங்ஙன மோதியன போலுந் தொன்னெறியினைத் தமக் கிலக்கணமாகவுடைய ரென்றவாறு.