உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


8.மழவர் வரலாறு

பண்டைக்காலத்தில் நம் தமிழகத்தின் ஒரு பகுதியை மழவர் என்ற ஒரு குலத்தினர் ஆட்சிபுரிந்துள்ளனரென்பதும், இன்னோர் பெருவீரர் களாயிருந்தமையின் அந்நாளில் தமிழகத்தில் ஆட்சிபுரிந்துவந்த முடியுடை வேந்தர்களாகிய சேரசோழ பாண்டியர்கட்கு உற்றுழியுதவி வந்துள்ளன ரென்பதும் அகநானூறு[1] புறநானூறு[2] பதிற்றுப்பத்து[3] முதலான சங்க நூற்களை ஆராய்வார்க்கு இனிது புலப்படும். கடையெழு வள்ளல்களிற் சிலர் இக்குலத்தைச் சேர்ந்தவராவர். வரையா மலீயும் வள்ளல்களாய் முற்காலத்தே பெரும்புகழ் படைத்து நிலவிய அதியமான் நெடுமான் அஞ்சி, ஓரி முதலானோர் தோன்றியது இம்மழவர் குலமெனின் இதற்கு வேறு சிறப்பும் வேண்டுமோ? இத்தகைய பெருமை வாய்ந்த மழவர் குலத்தின் வரலாறு நாம் அறிந்துகொள்ளுதற்குரியதொன்றாகலின் அதனைப் பண்டைத் தமிழ் நூற்களின் துணைகொண்டு ஆராய்ந்து அறிய முயல்வோம்.

இனி, இம்மழவர் என்பார் யாவர்? இவர்கள் எவ்வகுப்பைச் சேர்ந்தவர்கள்? இவர்களது பழைய நாடு யாது? இன்னோர் தமிழகத்தின் பழைய மக்களா? அன்றி அங்கு இடையிற் குடியேறியவர்களா? மற்றும் இவர்களைப் பற்றிச் சிறப்பாக அறிந்துகொள்ளக்கூடியன யாவை? இவர்களது வழியினராக இப்போது நம் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றவர் யாவர்? என்பவற்றை ஆராய்வாம்.

மிகப்பழைய காலத்தில் நம் தமிழகத்தின் தென்பகுதியைக் கடல்கொண்டபோது அழிந்தொழிந்த தமிழ் நூற்கள்


.


  1. அகநானூறு 1, 35, 91, 101, 119, 121, 127, 129, 131, 187, 251, 269, 309, 337
  2. புறநானூறு. 90
  3. பதிற்றுப்பத்து 21, 55, 60 - பதிகம்