உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


12. கோவிந்த புத்தூரிலுள்ள
திருவிசயமங்கைக் கல்வெட்டுக்கள்

கோவந்த புத்தூர் என்பது திருச்சிராப்பள்ளி சில்லா உடையார் பாளையம் தாலுக்காவிலுள்ள ஒரு சிவத்தலமாகும். இது கும்பகோணத்திற்கு வடமேற்கில் ஐந்துமைல் தூரத்திலுள்ள திருப்புறம்பயத்திற்கு வடமேற்கே மூன்றுமைல் தூரத்தில் கொள்ளிடப்பேராற்றின் வடகரையில் இருக்கின்றது. இவ்வூரிலுள்ள சிவாலயம் திருவிசயமங்கை என்னும் பெயருடையதாகும். இது சைவசமயாசாரியராகிய திருஞான சம்பந்தராலும் திருநாவுக் கரசராலும் பாடப்பெற்ற பெருமையும் பழமையும் வாய்ந்தது: பாண்டுவின் மகனாகிய பார்த்தனால் பூசிக்கப் பெற்றமையின் இஃது இப்பெயரெய்திற்று என்பது ‘பாண்டுவின் மகன் பார்த்தன்' பணி செய்து வேண்டு நல் வரங்கொள் விசையமங்கை ஆண்ட வன்னடியே நினைந் தாசையாற்காண்ட லேகருத்தாகி யிருப்பனே என்னும் ஆளுடைய அரசினது திருப்பாடலால் நன்குபுலப்படுகின்றது கோவந்தபுத்தூர் என்பது இக்காலத்தில் கோவந்த புத்தூர் என்று வழங்குகின்றது. அத்தலத்தில் கோ வந்து பூசித்த காரணம் பற்றி அஃது அப்பெயர் எய்தியது போலும். இவ்வரலாறு அக்கோயிலின் திருச்சுற்று மாளிகையில் அமைக்கப்பெற்றுள்ள சுதைப்படிமங்களால் விளங்குகின்றது. அன்றியும், கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில் வெள் விடைக் கருள்செய் விசயமங்கை - உள்ளிடத் துறை கின்றவுருத்திரன் கிள்ளி டத்தலை யற்றத யனுக்கே என்னும் தேவாரப்பாடலும் ஈண்டு ஆராய்தற்குரிய தாகும். கோவந்த புத்தூரும் அவ்வூரி லுள்ள சிவாலயமாகிய திரு விசயமங்கையும் வெவ்வேறு தலங்கள் என்றும் அவற்றுள் கோவந்தபுத்தூர் வைப்புத்தலம் என்றும் திருவிசயமங்கை பாடல் பெற்றதலம் என்றும் கருதிவந்தனர். கோவந்தபுத்தூரில்