பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

148

பெரியண்ணாவோ சின்ன அண்ணாவோ வந்தால் மட்டும் இங்கு நான் வரச்சொன்னேன் என்று சொல்” என்று சொன்னாள்.

கோகிலா கணேசனை அழைத்துக்கொண்டு அப்புறம் போகலானாள்.

பின் திலகவதி மங்கையை நோக்கி, “மங்கை! அருகே வா!” எனக் கைநீட்டி அழைத்து, “சகோதரி, உனக்கு நான் எத்தனையோ வகைகளில் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னால் எந்த வழியிலும் உனக்குக் கைம்மாறு செய்ய முடியாது. நன்றி தெரிவித்துக் கொள்ளமட்டும்தான் முடியும்.”

“அக்கா! இது என்ன பேச்சு? நீங்கள் மன நிம்மதியோடு பேசாமல் இருங்கள். நான் போய்க் கொஞ்சம் கஞ்சி கொண்டு வருகிறேன்.........” எனக் கூறி அவள் பேச்சை மாற்றிவிட்டு அங்கிருந்து அகல முயன்றாள் மங்கை.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். தயவு செய்து நான் சொல்வதைச் சற்றுக் கேள். நீ முதன் முதலாகச் சித்தியுடன் இங்கு வந்தபோது நான் சொன்ன வார்த்தைகள் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்......”. இது உன் வீடு. நீதான் இந்த வீட்டுத் தலைவி” என்று சொன்னேன். அப்போது அவ் வார்த்தைகளை நான் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த உனக்கு ஆறுதலாக இருக்க உபசார மொழியாகக்கூடச் சொல்லியிருக்கலாம். ஆனால், இப்போது சொல்லுகிறேன்: இது உன் வீடு. இனிநீதான் இந்த வீட்டின் தலைவி. இதோ இருக்கும் அத்தான், சிவன், விசுவம், கோகிலா, கணேசன் அனைவரும் உன் பராமரிப்பில் இருக்க வேண்டியவர்கள். இப்போது இவர்கள் அனைவரையும் அன்பாக ஆதரித்து வருவதுபோலவே இனியும் இன்னும் அதிகமாய்ப்பாதுகாத்து வர வேண்டும். தெரிகிறதா இவர்களுக்கு உன்னை விட்டால் வேறு துணை இல்லை. என் சகோதரர்களோ சகோதரிகளோ இவர்களுக்கு உற்ற துணையாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்.