பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தும்பைப் பூ

 என்ன தான் இருந்தாலும் என்னைப் போன்ற ஒரு வயதுப் பெண் வேறொருத்தர் வீட்டில்-அதுவும் அத்தான் முறையுள்ளவர் வீட்டில் இருப்பதைப் பற்றி யாராயினும் அக்கப் போர் செய்தால் என்ன செய்வது? என்றே அஞ்சுகிறேன்..” என்று மங்கையர்க்கரசி வருத்தந் தோன்றக் கூறினாள்.

சிவகாமியம்மாள், யார் என்ன சொல்லுவது? அத்தான் வீடாயிருந்தால் என்ன? எத்தனை பெண்கள் அக்கா புருஷன் வீட்டில்-மாமன் மகன் வீட்டில் இருக்கிறார்கள்? நீ பார்த்ததில்லையா? நீயாயினும் கலியாணமானவள்; இருபது வயதுக்கு மேற்பட்டவள். பெரிய மனுஷியான பெண்கள் பெற்றோர் இல்லாததால் அத்தான் வீட்டிலும் அம்மான், விட்டிலும் இருந்து வருகிறார்கள். இதெல்லாம் இயற்கையே’ குறை சொல்கிறவர்கள் எதற்கும்தான் சொல்வார்கள். மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து கொண்டு காலங்கழிப்பதென்றால் மகளிராகிய நாம் வாழவே முடியாது. நல்லொழுக்கத்தினின்றும் வழுவாமலிருக்கிறோமா? என்று நம் மனச் சாட்சிக்கு அஞ்சி நடந்தோமானால் அதுவே போதும். மங்கையர்க்கரசி இந்தக் கொள்கையை நீ எப்போதும் மனதில் வைத்துக் கொள்...' என்று பெரிய தத்துவ ஞானிபோல் உபதேசஞ் செய்யலானாள்.

"இந்த வூடுதானே? பெரியம்மா சொன்னே? என்று வண்டிக்கார சாயபு கேட்ட கேள்வி இருவரையும் தன்னிலைக்குக் கொண்டு வந்தது. "நாம் பேசிக் கொண்டிருந்த விஷயம் வண்டிக்காரன் காதில் விழுந்து விட்டதோ! வண்டியில் இருக்கிறோம் என்றுகூட ஞாபகமில்லாமல் ஏதேதோ பேசிவிட்டோமே” என்று இருவருமே எண்ணினார்கள். மங்கையர்க்கரசி வெட்கத்தால்தலை குனிந்து கொண்டாள். சிவகாமியமமாள் மட்டும் வண்டிக்காரன் சாயபுவாதலால் நாம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்திருந்தாலும் சரியாகப் புரிந்து கொண்டிருக்கமாட்டான் என்று தனக்குத்-