பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


முதற் பதிப்பின் முன்னுரை

இருபது ஆண்டுகளுக்கு முன், திருச்சிராப்பள்ளியில் நண்பர் ஒருவருக்கு நடந்த திருமணத்துக்குப் போய்விட்டுச் சென்னை மாநகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தையடைந்ததும் பயண அலுப்புத் தாங்காமல் அவசரமாக வண்டியை விட்டு இறங்கலானேன். நான் அமர்ந்து வந்த பெட்டிக்கு முன்னுள்ள பெண்கள் பெட்டியிலிருந்து ஏராளமான பெண்கள் இறங்கினர். இக்கூட்டத்தில் தென்பட்ட ஒரு முதியமாதும் இளமங்கையொருத்தியும், என் கவனத்தைக் கவர்ந்தனர். தாயும் மகளும் போலிருந்த இருவருமே விதவைகளாயிருந்தனர். பதினெட்டு வயது கூடச் சரியாக நிரம்பாத அந்த இளம்பெண் துவைத்துக் காவியேறிய வெள்ளைப் புடைவை கட்டிக் கொண்டிருந்தாள். அவள் நீளமான கூந்தலைக் கோதி முடித்திருந்ததும் நெற்றியில் ஒன்றுமே வைக்காமல் இருந்ததும், கழுத்தில் தாலியில்லாதிருந்ததும் அவள் பாலிய விதவை என்பதைப் பறைசாற்றியது. கன்னிப் பருவத்திலேயே கைம்மை நோன்பு நோற்கும் ஓர் அபூர்வப் பெண்ணைப் பார்த்து என் மனம் கழிவிரக்கங் கொண்டது. தாயும் மகளும் கண்ணுக்கெட்டாத் தூரம் போயும் அவர்களுடைய பரிதாபத் தோற்றங்கள் என் கண்களை விட்டு அகலவில்லை. என் கற்பனையுள்ளம் அவர்களுடைய நிலையைப்பற்றி— முக்கியமாக அந்த இளம் விதவைப் பெண்ணைப்பற்றி — என்னென்னவோ எண்ணலாயிற்று. நாடோறும் நூற்றுக்கணக்கான பேர்களைப் பார்க்கிறோம்; அவர்களில் ஒரு சிலரை நம்மால் மறக்க முடிவதில்லை. அவர்களுடைய உருவமும் நினைவும் — நம் நெஞ்சில் உறைந்து விடுகின்றன. அதுபோலத்தான், இவ்விரு வைதவ்வியத்தின் பிரதிபிம்பங்கள் என் நினைவில் நிலைத்துவிட்டன, என் மனக் கண்ணில் சோகமே உருவான அந்த இளம் விதவையின் உருவம் அடிக்கடி தோன்றி ஏதேதோ கதை சொல்லி வரலாயிற்று.