உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தென்னாட்டுப் போர்க்களங்கள்

புனைந்துரையன்று, வரலாறே!

தமிழகத்தின் வீரப்புகழ் வெறும் புனைந்துரையன்று, மிகையுரையன்று; வரலாறு காட்டும் செய்தியேயாகும். கவிஞர் பாரதியார் அவ்வரலாற்றுச் செய்திகளைத் திரைப்படக் காட்சிகளைப்போல நம் மணக்கண் முன் ஓடச் செய்கின்றார்,

"விண்ணை இடிக்கும் தலைஇமயம்-எனும்
வெற்பை அடக்கும் திறலுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திபர் நின்ற தமிழ்நாடு."

நில எல்லையில் தமிழர் பண்டைப் பெருவெற்றிகள் இமயத்தை அடக்கின. தமிழ் மூவேந்தரும் வில், கயல்,புலி ஆகிய முத்தமிழ்க் கொடிகளையும் இமயமலையுச்சியில் பொறித் தார்கள். நில உலகத்தின் கூரை எனப்படும் இமயம் தமிழர் வீரப் புகழை வானகத்துக்கு எடுத்துரைத்தது. அது தமிழர் தம் கொடிமரமாகவே அன்று நிலவிற்று. அத்துடன் இமயத்தையடுத்த வடநாடாகிய கங்கை நாட்டையும் இடை நாடுகளாகிய வங்கத்தையும், கலிங்கத்தையும் வென்று அவர்கள் போர்ப் பரணி பாடினார்கள்.

காரிகால சோழன் இமயங்கடந்து மேருமலையின் உச்சி யையே தாக்கினான். அதைத் தன் செண்டாயுதத்தால் அடித்து அதன் தருக்கை அடக்கினான். அதன் முன்புற நெற்றியில் மட்டுமன்றிப் பின் புறத்திலும் தன் புகழ் எழுதுவதற்காக, அவன் அதன் தலையைத் திருகினான். இருபுறங்களிலும் தன் புலிக்கொடி பொறித்து, வடதிசைப் பெருமன்னரிடம் பெரும் பொருள் திறைகொண்டு மீண்டான்.

சேரன் செங்குட்டுவன் கங்கைக் கரைகடந்து ஆரிய அரசர் கனகன், விசயன் ஆகியவர்களை முறியடித்தான். அவர்கள் தலைகள் மீதே இமயமலையின் பெருங்கல்லொன்றை ஏற்றிக்கொண்டு தமிழகத்துக்கு வந்தான். தன் தலைநகராகிய வஞ்சியில் தமிழர் கற்புத் தெய்வமாகிய கண்ணகிக்கு அக் கல்லிலேயே சிலை செதுக்குவித்தான். இது தமிழ்ப் பெருங் காப்பியமான சிலப்பதிகாரம் தரும் செய்தியாகும்.

கடல் கடந்த வெற்றிகள்

நில எல்லையில் தமிழர் வெற்றிகள் இவை. ஆனால் ஏனைய கீழ்திசை மன்னரைப்போல, அசோகன், ஹர்ஷன், அலாவு-