பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

ஸ்தாபனத்திற்கு வலுவூட்ட புதுத் திட்டத்தைக் காமராஜ் தெரிவித்து, காங்கிரசுக்கே ஓர் அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருக்கிறார். காமராஜ் திட்டம் நாம் செல்ல வேண்டிய புதுப் பாதையைக் காட்டியிருக்கிறது. காங்கிரஸ்காரர் பதவியிலிருந்து விலகமுடியும்; அல்லது பழைய உளுத்துப்போன வழியிலிருந்து அவர்களே அகற்றி, புதுவழியில் திருப்பமுடியும் என்பதைக் காமராஜ் திட்ட அமுல் நிரூபித்துவிட்டது!...”

உண்மை; ஒரு நாட்டின் தலைமைப் பீடம் என்பது ஒரு கோயிலுக்குச் சமானமாகும். அந்தத் தலைமைப் பதவியில் அமருவதற்குத் தேவைப்படுகின்ற குண நலன்கள் பலவுண்டு. நாட்டுத் தலைவனிடம் அந் நாட்டின் தலையெழுத்தையே ஒப்படைத்துவிடுகிறோம். ஆகவேதான், அத் தலைவன் நாட்டுப்பற்றே உயிர்ப்பாகக் கொண்டு, சுயநலப் பண்பைத் துறந்து, பந்தபாசம் கட்டறுத்துவிட்டு, பொது மக்களின் வளப்பமான எதிர்காலமும் சுமுகமான நல் வாழ்வுமே தன் கனவு, இலட்சியம் என்று கருதுபவனாக இருக்க வேண்டும். இவ்வகையான மனச் சாட்சிக் குறிக்கோளை ஓம்பி நடக்கும் மனிதர்கள் மேற் சொன்ன தலைமைப் பொறுப்பிற்கு வாய்ப்பது வெகு அபூர்வம்.

அந்த ஓர் அபூர்வமாக - அபூர்வத் தலைவர் காமராஜர்-தமிழகத்தின் சொத்தான காமராஜர் இன்று பாரதத்தின் பொது உடைமையாக ஆகி விட்டார். பூதலத்தின் ரோஜாவாகிவிட்டார்!...

தமிழ் கொண்டு இமயம் வரை வென்றுவிட்டது ஒரு தமிழ் உள்ளம்!

இனி, தமிழன் என்றென்றும் தலை நிமிர்ந்து நடப்பான்!